`எந்தக் கோப்புகளையும் எனக்கு அனுப்புவதில்லை; இதைச் சொல்ல வேண்டியது என் கடமை!’ - கிரண் பேடி | "The stopped sending me files" Governor Kiran Bedi

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:13:00 (17/05/2019)

`எந்தக் கோப்புகளையும் எனக்கு அனுப்புவதில்லை; இதைச் சொல்ல வேண்டியது என் கடமை!’ - கிரண் பேடி

``அரசுக் கோப்புகளை என்னிடம் அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள்” என்று ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி மக்களிடம் தெரிவித்திருக்கிறார்.

கிரண் பேடி

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 வருடங்களாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், ``அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின்படிதான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியுமே தவிர, அவருக்கென பிரத்தியேகமான சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. அப்படியான அதிகாரங்கள் எதுவும் யூனியன் பிரதேச சட்டத்தில் வழங்கப்படவில்லை. தேவைப்படும் நேரங்களில் அமைச்சரவையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

நாராயணசாமி

சட்டப்பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலில் பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடிக்க முடியாது. யூனியன் பிரதேச விதிகளின்படி குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரங்களைக் கொண்டு அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ, தலையீடு செய்வதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக அரசை நடத்தவோ துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, சட்டப்பேரவையில் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் அளித்து, மத்திய அரசு 2017-ல் பிறப்பித்த 2 உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஆர்.மகாதேவன்.

லட்சுமி நாராயணன்

அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு இடைக்கால தடையை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைப்பதாக அதிரடியாகக் கூறிவிட்டது உச்ச நீதிமன்றம். அதைத் தொடர்ந்து ``அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அதனால் கிரண் பேடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என்று அதிரடி காட்டினார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி

அதேபோல, ``நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதை மீறிச் செயல்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலர்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தைச் செய்தியாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய கிரண் பேடி, ``நிர்வாகம் என்பது மக்களுக்கானது. கடந்த சில நாள்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் மற்றும் நிர்வாகி என்ற முறையில் இதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. யூனியன் பிரதேசத்தின் சட்ட விதிகள், வணிக விதிகள் மற்றும் நிதி விதிகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க