`காலை மாலை இலவச டியூஷன்’ - நால்லாடை கிராமத்தின் காம்ரேட் பொன்.பக்கிரிசாமி #MyVikatan | Pon. Pakkirisamy of nalladai village is educating others

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:17:48 (17/05/2019)

`காலை மாலை இலவச டியூஷன்’ - நால்லாடை கிராமத்தின் காம்ரேட் பொன்.பக்கிரிசாமி #MyVikatan

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள நல்லாடை கிராமத்துக்கு சிறுவயதிலேயே வெளியூரிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர் பொன். பக்கிரிசாமி. கல்வியில் நாட்டமில்லாத கிராமத்தினருக்கு காலை, மாலை டியூஷன் வகுப்புகள் இலவசமாக நடத்தி முற்போக்கு சிந்தனையை வளர்த்தவர்.

பொன்.பக்கிரிசாமி

மது, புகையிலை என எவ்வித கெட்டப் பழக்கமும் இல்லாதவர். ஆரம்பத்தில் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணா தலைமையில் மேற்கு திசை நோக்கி அமர்ந்து கறுப்புக் கயிற்றில் தாலிக் கட்டி கிராமத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர். பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து அதன் பிரசார பீரங்கியாய் வலம் வந்தவர். ஊராட்சி மன்றத் தலைவராகவும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும், தொழிற் சங்கத் தலைவராகவும், விவசாய சங்கத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாக்களில் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவர்களுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்றை நீண்ட நேரம் விளக்கிப் பேசுவார்.

வெயிலில் நின்றுகொண்டு அவரது உரையைக் கேட்க முடியாமல் சில மாணவர்கள் மயங்கி விழுந்ததும் உண்டு. காங்கிரஸ் பற்று காரணமாக அவரது பிள்ளைகளுக்கு முறையே ஜவகர், சம்பத், காமராஜ் என பெயர் சூட்டியிருக்கிறார். 85 வயதாகும் பொன். பக்கிரிசாமி 60 வயது தோற்றத்துடன்  இளைஞர்போல் இன்றும் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார்.