`கணவர், குழந்தையைக் கொன்னு புதைச்சிட்டேன்!’ - வேலூர் போலீஸாரை அதிரவைத்த இளம்பெண் | 'Husband and child murdered by wife, police investigation on

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (17/05/2019)

கடைசி தொடர்பு:21:56 (17/05/2019)

`கணவர், குழந்தையைக் கொன்னு புதைச்சிட்டேன்!’ - வேலூர் போலீஸாரை அதிரவைத்த இளம்பெண்

ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தையைக் காணவில்லை என்று போலீஸில் புகாரளிக்க வந்த இளம்பெண், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டார். காதல் கணவரையும், குழந்தையையும் கொடூரமாக கொலைசெய்து ஏரி கரையில் புதைத்துவிட்டதாக அப்பெண் கூறியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

வேலூர்  ராஜா மற்றும் குழந்தை

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25). பெற்றோரை இழந்த இவர், எலெக்ட்ரீசியன் வேலை செய்துவந்தார். ராஜாவும், அதே பகுதியில் வசித்துவந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த தீபிகா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கணவர் மற்றும் குழந்தையைக் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் தீபிகா நேற்று மாலை புகார் அளிக்கவந்தார். போலீஸாரின் கேள்விகளுக்கு தீபிகா மழுப்பலாகப் பதிலளித்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

போலீஸார், அந்தப் பெண்ணிடமே தீவிரமாக விசாரணை நடத்தியதில், ``என் கணவரையும், குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்து வீட்டின் அருகே உள்ள ஏரிக் கரையில் சடலங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டேன்’’ என்று அதிர்ச்சித் தகவலைக் கூறினார். உடனடியாக போலீஸார், தீபிகாவின் வீட்டுக்குச் சென்றனர். ஏரியைப் பார்வையிட்டு அக்கம், பக்கம் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இரவு 11 மணியானதால் சடலங்களைத் தேடும் பணியை தொடங்கவில்லை. இதையடுத்து, இன்று காலையிலிருந்து ஏரிக் கரையில் பள்ளம் தோண்டி உடல்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். கணவர் மற்றும் குழந்தையைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதனிடையே, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராஜாவின் நண்பர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவருடன் தீபிகாவுக்கு தவறான உறவு இருந்ததா? அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவரையும், குழந்தையையும் தீபிகா கொலை செய்தாரா? என்கிற கோணத்தில் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம், ஆற்காடுப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.