அய்யர்மலைக்கு மேல் காகம் பறக்காதாம்! - கரூர் மர்மம் #MyVikatan | Rathinagireeswarar temple at Ayyar Malai where crow will not enter

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (17/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (17/05/2019)

அய்யர்மலைக்கு மேல் காகம் பறக்காதாம்! - கரூர் மர்மம் #MyVikatan

யாரும் இல்லாத மயான அமைதி நிலவும் இடத்தை, `அங்க ஒரு ஈ காக்காகூட கிடையாது' என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலைக்கு மேலே குறிப்பிட்ட சுற்றளவில், விமானம் பறக்கலாம், ஹெலிகாப்டர் பறக்கலாம், ஈ பறக்கலாம், தட்டான்கூட பறக்கலாம். ஆனால், காகம் பறக்க அனுமதில்லை. இது கோர்ட்டோ, போலீஸோ போட்ட தடை என நினைக்கவேண்டாம். மலைமீது அமைந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ரத்தினகிரீஸ்வரர் போட்ட தடா இது.

அய்யர் மலை

 7-ம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், அப்பர், சுந்தரர் போன்றவர்கள், இந்தத் தலத்தில் தேவாரம் பாடியதாக குறிப்புகள் சொல்கின்றன. இம்மலையின் புகழ், பாடுபவர்களின் வாய்மணப்பதாக சிலாகிக்கப்படும் திருப்புகழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்யர் மலை

பாண்டியர்கள், விஜயநகர பேரரசின் மன்னர்கள் இங்கு வழிப்பட்டதற்கான சான்றுகள் கொண்ட கல்வெட்டுகள் இன்றும் இங்கே உள்ளன. ஞானத்தை அடைய திருவள்ளுவர் எழுதிய 1330 ஈரடி குறள்களைப் படித்துக் கடக்க வேண்டும் என்பதுபோல், இந்த மலை உச்சியில் உள்ள சிவனை வழிபட தம்கட்டி 1017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். எந்தக் கோயில் கடவுளுக்கும் இல்லாத சிறப்பு, இங்கே உள்ள ரத்தினகிரீஸ்வரர் சிவனுக்கு உண்டு. `எனக்கென்று எந்தக் குலதெய்வமும் இல்லையே' என்று உள்ளம் மறுகுபவர்கள், தயங்காமல் ரத்தினகிரீஸ்வரை தமது குலதெய்வமாக பாவிக்கலாம். அதற்காக, அனுமதியை எல்லோருக்கும் வழங்கி இருக்கிறார் ரத்தினகிரீஸ்வரர். 1,300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகவும் இதைச் சொல்கிறார்கள். சரி, நாம் சொல்ல வந்த விவகாரத்துக்கு வருவோம். 

அய்யர் மலை

 இந்த மலையின் மேலே, குறிப்பிட்ட சுற்றளவு தூரத்துக்கு காகம் எதுவும் பறக்காது என்பது ஐதிகம். ஏனாம்? விசாரித்தோம்.

``பலநூறு வருஷத்துக்கு முன்னாடி, ரத்தினகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வச்சிருந்துருக்காங்க. கடும் தாகத்தில் வந்த ஒரு காகம், அந்தப் புனித நீரைக் குடித்ததோடு, தட்டிவிட்டு, கீழே நீர் சிந்தக் காரணமாயிட்டு. இதனால், சிவனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டதாம். `எனக்கு அபிஷேகம் செய்ய வச்சிருந்த புனித நீரை தட்டிவிட்ட உன்னைச் சபிக்கிறேன். இன்றில் இருந்து என் சந்நிதி மேலே உங்க இனமே பறக்க முடியாது' என்று சாபம் விட்டாராம். அன்றுமுதல், அய்யர்மலைக்கு மேலே காகங்களால் பறக்க முடியாது. அப்படியே பறந்து வர நினைத்தாலும், மின்சாரம் தாக்கியதுபோல் காகங்களுக்கு ஆகிவிடும்னு சொல்றாங்க. நாங்க இதுவரை, எங்க இத்தனை வருஷ வாழ்நாள்ல ஒரு காகம்கூட மலைக்கு மேலே பறந்து பார்த்ததில்லை" என்றார்கள்.