`காந்தியை ஏன் இந்துவாக கமல்ஹாசன் அடையாளப்படுத்தவில்லை?’ - இல.கணேசன் கேள்வி | Why Kamal Haasan did not mention Gandhi: asks BJP's ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (17/05/2019)

கடைசி தொடர்பு:15:20 (17/05/2019)

`காந்தியை ஏன் இந்துவாக கமல்ஹாசன் அடையாளப்படுத்தவில்லை?’ - இல.கணேசன் கேள்வி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரவாதம் குறித்துப் பேசிய கருத்துகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. இது தொடர்பாக தஞ்சாவூரில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், ``இந்துவான காந்தியை ஏன் கமல்ஹாசன் அடையாளப்படுத்தவில்லை. எதிர்மறையாக உள்ள ஒருவரை இந்து என அவர் அடையாளப்படுத்துவது இந்து மதத்தை திட்டமிட்டே இழிவுபடுத்தும் செயலாகும்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

கமல்ஹாசன்

இதுதொடர்பாக விரிவாகப் பேசிய இல.கணேசன்,  ``குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளைப் பெறுவதற்காகவே, கமல்ஹாசன் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இது திட்டமிட்ட சந்தர்ப்பவாதமாகும். இந்து என யாரையாவது அடையாளப்படுத்துவதாக இருந்தால் காந்தியைக் குறிப்பிடலாம். ஆனால் கமல்ஹாசனோ, எதிர்மறையாக உள்ள ஒருவரை இந்து மதத்துக்கான அடையாளமாக குறிப்பிடுவது திட்டமிட்ட சந்தர்ப்பவாதமாகும். இது உள்நோக்கம் கொண்டது. அவர் கோட்சேவை மட்டும் கூறவில்லை. இந்துக்களையும் இந்து மதத்தையும் ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தியுள்ளார்.

கணேசன்

அரவக்குறிச்சி தேர்தலுக்கும் மகாத்மா காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அங்கு பேசிய கமல்ஹாசன் காந்தி கொலைக்கு நியாயம் கேட்க வந்துள்ளேன் எனவும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறியுள்ளார். கமல்ஹாசன் ஒரு குழப்பவாதி என்பது இதிலிருந்து உறுதியாகிறது” என தெரிவித்தார்.