மார்ட்டின் உதவியாளர் மரணம்: உடற்கூறாய்வில் எழுந்திருக்கும் புதிய சர்ச்சை! | Compliants about Palanisamy's post mortem report

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (17/05/2019)

கடைசி தொடர்பு:18:19 (17/05/2019)

மார்ட்டின் உதவியாளர் மரணம்: உடற்கூறாய்வில் எழுந்திருக்கும் புதிய சர்ச்சை!

தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும்போது, கண் பகுதி உள்ளேதான் போகும். ஆனால், பழனிசாமியின் கண் வெளியே வந்துள்ளது. அதுவும் ஒரு கண் மட்டும் எப்படி வெளியே வரும்?

மார்ட்டின் உதவியாளர் மரணம்: உடற்கூறாய்வில் எழுந்திருக்கும் புதிய சர்ச்சை!

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்பான இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவை, சென்னை, மும்பை, கொல்கத்தா என்று நாடு முழுவதும் 70 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. குறிப்பாக, மார்ட்டின் குழும ஊழியர்களிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பழனிசாமி என்பவரின் உடல், காரமடை வெள்ளியங்காடு குட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

"வருமானவரித்துறை கொடுத்த டார்ச்சரும் மார்ட்டின் குடும்பத்தினரும்தான் பழனிசாமி மரணத்துக்குக் காரணம்" என்று அவரின் குடும்பத்தினர் புகார் எழுப்பினர். முக்கியமாக, "வருமானவரித்துறை அதிகாரிகளிடம் உண்மையைச் சொன்னதால், மார்ட்டின் மற்றும் அவரின் மனைவி லீமா ரோஸ் என் கணவரை கொன்றுவிட்டனர்" என்று பழனிசாமியின் மனைவி சாந்தாமணி குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மார்ட்டின் தரப்பினர் மறுத்துள்ளனர்.

பழனிசாமி உயிரிழந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. உடற்கூறாய்வும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், "வருமானவரித்துறையினர் மற்றும் மார்ட்டின், லீமா ரோஸ் உள்பட பழனிசாமி மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைதுசெய்ய வேண்டும்" என்று கூறி, அவரின் உறவினர்கள் பழனிசாமியின் உடலை வாங்க மறுத்து, சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர். பழனிசாமியின் மரணத்தை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று அவரின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், "சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துவார். மறு உடற்கூறாய்வு செய்வதையும் மாஜிஸ்திரேட்டிடமே முறையிட வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ட்டின்

இந்நிலையில், பழனிசாமியின் உடலுக்கு ஏற்கெனவே செய்யப்பட்ட உடற்கூறாய்வு தொடர்பாக புகார் எழுந்துள்ளது. "இந்தக் காயங்கள் பழனிசாமி இருக்கும்போது ஏற்பட்டதா... இறந்தபிறகு ஏற்பட்டதா. கண், நாக்கு வெளியில் வந்தது தொடர்பான முழுமையான விபரங்கள் அறிக்கையில் இல்லை" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து, பழனிசாமியின் மகன் ரோஹின்குமார், "மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து, கோவை கொண்டுவந்தரோஹின் குமார்போது என் தந்தையின் உடல் நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் அவரின் உடலைச் சரியாகப் பதப்படுத்தி வைக்கவில்லை. மேலும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அதற்கான காரணத்தையும் விளக்கவில்லை. உடற்கூறாய்வின்போது, எங்கள் தரப்பினரையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம். அனுமதிக்கவில்லை. உடற்கூறாய்வின்போது எடுத்த வீடியோவையும் எங்களுக்கு வழங்கவில்லை.

அப்பாவின் உடலில் இருந்த பல காயங்களை, உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடவில்லை. அவரின் உடலைப் பார்க்கவும், அனுமதி வழங்க மறுக்கின்றனர். இவை எல்லாம்தான், எங்களுக்குச் சந்தேகத்தை அதிகரிக்கின்றன. மாஜிஸ்திரேட் விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றால், மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியிருக்கிறார்கள். மறு உடற்கூறாய்வுக்குப் பிறகே அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்" என்றார்.

தடயவியல் நிபுணர் டாக்டர் ப்ரித்விராஜன், "மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும், டயட்டோம் (Diatom) சோதனை முடிவுகள் 10 ப்ரித்விராஜன்நாள்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்த முடிவு மூன்று நாள்களுக்குள் வந்துவிடும். ஆனால், இந்த வழக்கில் ஏதோ ராணுவம்போல ரகசியம் காக்கின்றனர். தோலில் இருந்து, கைரேகையை எடுக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அந்தச் சோதனையைச் செய்யவில்லை. இதுபோன்ற பல சோதனைகளைச் செய்யாமல், அவர்களின் இஷ்டத்துக்கு உடற்கூறாய்வு செய்துள்ளனர். மேலும், உடற்கூறாய்வு அறிக்கையில் இவர்கள் சொல்லும் தகவல்களே சந்தேகத்தை எழுப்புகின்றன. வயிற்றில் இருந்து வெள்ளை மற்றும் நீல நிறத்தில் துகள்கள் எடுக்கப்பட்டுள்ளன. பழனிசாமி அரை உணர்வில் (semi-conscious) இருக்கும்போது, தண்ணீரில் வைத்து அமுக்கிக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அறிகுறிதான் இந்தத் துகள்கள். நீரில் மூழ்கியதற்கான எந்த ஆதாரமும் அறிக்கையில் சொல்லப்படவில்லை.

பழனிச்சாமிபழனிசாமியின் உடல் கெட்டுப்போய்விட்டதாகச் சொல்லியுள்ளனர். கெட்டுப்போனால், ரத்தம் பிங்க் நிறத்தில் இருக்கும். ஆனால், இவர்கள் அதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும்போது, கண் பகுதி உள்ளேதான் போகும். ஆனால், பழனிசாமியின் கண் வெளியே வந்துள்ளது. அதுவும் ஒரு கண் மட்டும் எப்படி வெளியே வரும்? இதே சோதனைகளை, கோவை அரசு மருத்துவமனை தடயவியல் துறையில் தியாகராஜன் என்பவர் இருந்தபோது மேற்கொண்டனர். அப்படி இருக்கும்போது, அந்தச் சோதனைகளை ஏன் இப்போது செய்யவில்லை? தங்களது பணியை சரியாகச் செய்யாத மருத்துவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும்" என்றார்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், "எனக்கு இந்தப் பிரச்னை குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. உடற்கூறாய்வு அறிக்கையும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்குச் சென்றுவிடும். எனக்கு வராது" என்றார்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடயவியல் துறைத்தலைவர் ஜெயசிங், "சப் கலெக்டரின் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்தோம். இதை வீடியோ பதிவும் செய்துள்ளோம். விதிகள்படி, என்ன இருக்கிறதோ, அதன்படியே உடற்கூறாய்வு செய்துள்ளோம். இதுபற்றித் தெளிவான பார்வை இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் புகார் சொல்லலாம். இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம்" என்றார்.

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!


டிரெண்டிங் @ விகடன்