`அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 1.5 லட்சம் வாக்குகள் நிராகரிப்பா' - உண்மை நிலவரம் என்ன? | 1.50 lack government staff votes EC refused to count in tamilnadu?

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (17/05/2019)

கடைசி தொடர்பு:16:30 (17/05/2019)

`அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 1.5 லட்சம் வாக்குகள் நிராகரிப்பா' - உண்மை நிலவரம் என்ன?

ரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 1.5 லட்சம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

அரசு ஊழியர் வாக்குகள் நிராகரிப்பு

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிவது வாடிக்கையானது. இவர்களுக்குத் தபால் வழியாக வாக்களிக்க வழி வகை செய்யப்படும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில்,  அரசு ஊழியர்களின் 1.5 லட்சம் பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் உண்மை நிலவரம் அறிய, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில் போலீஸ் துறையைச் சேர்ந்த 90,002 பேரின் தபால் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுகள் பற்றி எந்த விவரமும் அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். 

இந்த மனு இன்று  விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், ``அரசு ஊழியர்கள் ஆசிரியர்களில் 4,10,200 தபால் ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். அதில், 3,97,391 பேரின் படிவங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. 12,915 பேரின் ஓட்டுகளின் விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்யாததால் ஏற்றுக்கொள்ளவில்லை. 1.5 லட்சம் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது என்பது தவறான குற்றச்சாட்டு'' என்று தெரிவித்தது.

விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தபால் வாக்குகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளனர். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையம் இடம் கொடுக்கக் கூடாது எனவும்  நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க