`ஐ.பி.எல் லட்சியம்.. டி.என்.பி.எல் நிச்சயம்’- கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் | Coimbatore all set for international cricket ground

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (17/05/2019)

கடைசி தொடர்பு:16:50 (17/05/2019)

`ஐ.பி.எல் லட்சியம்.. டி.என்.பி.எல் நிச்சயம்’- கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

இந்தியா கிரிக்கெட்

இந்தியாவில் மற்ற விளையாட்டுகளைவிட, கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, தமிழகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். ஆனால், சென்னையைத் தாண்டி தமிழகத்தில் வேறு எங்கும் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இதனால், அங்கு ரஞ்சி டிராஃபி, டி.என்.பி.எல் போன்ற தொடர்கள் நடைபெறும். ஆனால், ஏராளமான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வரும் கோவையில் சர்வதேச மைதானம் இல்லை என்பது குறையாகவே இருந்து வருகிறது.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக அவினாசி சாலை, நவ இந்தியா எஸ்.என்.ஆர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 9 ஏக்கர் அளவிலான நிலம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்தன. அந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கோவையில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்

கோவையில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்

இதுகுறித்து கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ``மைதானம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளோம். அடுத்தக்கட்டமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் ரூ.5 கோடி செலவில் மைதானத்தை மேம்படுத்த உள்ளனர். சர்வதேச தரத்தில் 3 பிட்ச்கள் உள்ளன. பயிற்சிக்காக 6 பிட்ச்கள், பெவிலியன், சைடு ஸ்க்ரீன், வலைப்பயிற்சி (Net Practice) வசதிகள் உள்ளன. கேலரியும் அமைக்க உள்ளோம்.

விமான நிலையம், ஸ்டார் ஹோட்டல்கள் அருகில் இருப்பதால், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவைதான் சர்வதேச போட்டிகளுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும். ஜூன் மாதத்தில் மைதானம் முழுமையாகத் தயாராகிவிடும். உலகக்கோப்பைக்குப் பிறகு இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சி டிராஃபி, டி.என்.பி.எல் போட்டிகள் நடப்பது உறுதி. அதேபோல, ஐ.பி.எல் போட்டிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.