`ஆட்சிக்கு ஆபத்து வந்தால்..?' - எடப்பாடி பழனிசாமி போடும் தேர்தல் கணக்கு! | Edappadi palanisamy try to save his regime

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (17/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (17/05/2019)

`ஆட்சிக்கு ஆபத்து வந்தால்..?' - எடப்பாடி பழனிசாமி போடும் தேர்தல் கணக்கு!

எடப்பாடி பழனிசாமி

ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து அஸ்திரங்களையும் கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க-வை ஆட்சிக்கு வராவிடக் கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். இதற்காக எந்த எல்லைக்கும் போக அவர் துணிவார் என்கிறார்கள். 22 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு ஆபத்து வரும் நிலை ஏற்பட்டால், சசிகலாவுடன் இணக்கமாகப் போகக்கூட அவர் தயாராகத்தான் இருக்கிறார் என்கிறார்கள். இதன் தொடக்கப்புள்ளியாகத்தான் எடப்பாடி வெளியிட்ட அறிக்கை உள்ளது என்கிறார்கள். ``கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. `கழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றிய சாதனைகள்' என்ற தலைப்பில் அந்த அறிக்கை அமைந்துள்ளது.

அறிக்கை

 

அதில் துறைவாரியாக அ.தி.மு.க அரசு மேற்கொண்ட சாதனைகள் பட்டியிலிடப்பட்டுள்ளன. ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்று ஏற்கெனவே முடிவாகியிருந்தது. அதன்படி அவர் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதில் பிரச்னை இல்லை. ஆனால், அந்த எட்டுப் பக்க அறிக்கையின் இறுதியில், வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் எடப்பாடி. அதுதான் ஓ.பி.எஸ் தரப்புக்கும் பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது. `அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட `இரட்டை இலை' சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தனிப்பட்ட முறையில் கட்சியையும் தனதாக்கிக்கொள்ள பார்க்கிறார் எடப்பாடி.

எடப்பாடி ஓபிஎஸ்

ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த காலங்களில் கட்சி சார்பில் வெளியான அறிக்கைகளில் இருவரின் பெயரும் கையெழுத்தும் இருக்கும். ஆனால், இந்த அறிக்கையில் அப்படியெதுவும் இல்லை. திட்டமிட்டு வெளியிடப்பட்டு வெளியிட்ட அறிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆட்சியாக இருந்தாலும், முதல்வருக்கு அடுத்தபடியாக இருப்பவர் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பெயர் இடம்பெறுவதில் என்ன சிக்கல்?'' என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில். கட்சியும் ஆட்சியும்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இது ஆட்சியைக் காப்பாற்றும் மற்றொரு யுக்திதான் என்பவர்கள், ``அவர்களுக்கு எடப்பாடியைக்காட்டிலும், ஓ.பி.எஸ் மேல்தான் கோபம். ஓ.பி.எஸை ஓரம்கட்டினால் போதும் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு புதுத் தேர்தல் கணக்கை வகுத்து வருகிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.