மனைவி சொன்ன ஒரு வார்த்தை; மினி அரண்மனையை எழுப்பிய கணவர்! - விழுப்புரம் பிரமாண்டம் #MyVikatan | Amazing house construction at Villupuram

வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:01 (17/05/2019)

மனைவி சொன்ன ஒரு வார்த்தை; மினி அரண்மனையை எழுப்பிய கணவர்! - விழுப்புரம் பிரமாண்டம் #MyVikatan

இன்று வளர்ந்து வரும் நாகரிக வளர்ச்சியில் கட்டடக்கலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. குகைகளில் இருந்து துவக்கத்தைக் கொண்ட வாழ்விடங்கள் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. இந்நிலையில் சற்று வித்தியாசமாக யோசித்து முகலாய மன்னர்களின் கட்டடக் கலைகளைப் போலவே வீடு ஒன்றைக் கட்டியுள்ளார் 12-ம் வகுப்பு முடித்த ஒருவர்.

விழுப்புரம் அரண்மனை


விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்துக்கு உட்பட்ட கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் கனகவேல் (52). அவரின் மனைவி கூறிய வார்த்தையாலும், தனக்கு கட்டடக் கலையில் உள்ள ஆர்வத்தாலும் முகலாய மன்னர்களின் பாணியில் அரண்மனை வடிவில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.

விழுப்புரம் அரண்மனை
 

அவருடைய இல்லம் நோக்கிப் பயணித்தோம். அப்போது வழியில் சிலரிடம் அந்த வீட்டுக்குச் செல்ல வழி கூறுங்கள் எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் ‘அது வீடு அல்ல கோட்டை’ எனக் கூறினார்கள். அவர்கள் கூறியதைக் கேட்கக் கேட்க மேலும் ஆர்வத்துடன் அந்த வீட்டை அடைந்தோம்.

விழுப்புரம் அரண்மனை
 

உள்ளே சென்றதும் முப்பரிமாண புத்தர் சிலை நம்மை இனிதே வரவேற்கிறது. எதிர்நோக்கி அழைத்த தம்பதியர். தண்ணீரை முதலில் கொடுத்துவிட்டு டீ சாப்பிடுகிறீர்களா, சாப்பாடு சாப்பிடுகிறீர்களா எனக் கேட்டு இனிதே வரவேற்றனர். அதே புன்னகையுடன் கனகவேலிடம் பேசத் தொடங்கினோம்.

விழுப்புரம் அரண்மனை


``நான் 12-ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். படித்து முடித்ததும் மேற்படிப்பு படிப்பதற்குப் பதிலாகத் தொழில் தொடங்கலாம் எனத் தோன்றியது. அதன்படி சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வங்கியில் 35,000 கடன் வாங்கி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கினேன். அந்தக் கடனையும் விரைவாக அடைத்தேன். அதனால் என்னைப் பாராட்டி மீண்டும் 10 லட்சம் ரூபாய் கடனாகத் தந்தார்கள். அந்தக் கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தினேன். கடனையும் திருப்பி அடைத்துவிட்டேன். 

விழுப்புரம் அரண்மனை


சில வருடங்களுக்கு முன்பாகக் கட்டடக்கலையின் மீது நாட்டம் ஏற்பட்டு அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். நான் எதைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதைச் சோதித்துப் பார்ப்பதும், அதை முழுவதுமாகத் தெரிந்துகொள்வதிலும் மும்முரம் காட்டுவேன். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் கண்காட்சிகளுக்கு ஏற்றவாறு சுற்றுச்சூழல் சார்ந்த பொருள்களைப் பற்றி ஆராய்ந்து விளக்கத் தொடங்கினேன். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவி அப்துல்கலாம் ஐயாவிடம் பரிசு பெற்றார்கள். கட்டடக்கலை சார்பாகத் தமிழகம் மற்றும் புதுவை முதல்வர்களிடம் என்னுடைய குழு பரிசு பெற்றுள்ளது.

விழுப்புரம் அரண்மனை

இப்படி ஒரு வீடு கட்ட வேண்டும் என உங்களுக்கு எப்படித் தோன்றியது?

என்னுடைய மனைவி சரளா, ஒருநாள் பேச்சுவாக்கில் ‘கொஞ்சம் வித்தியாசமா வீடு கட்டணும்’ அப்படின்னு கேட்டாங்க. கொஞ்ச நாள் போகட்டும் தேவையான அளவு பணம் சேர்ந்ததும் கட்டலாம் எனக் கூறினேன். அதன் பின்னர் யோசிக்கத் தொடங்கினேன். எந்த வடிவில் வீடு கட்டலாம் என்று. அந்தக் காலத்தில் பெரிய பெரிய மன்னர்களும் ஜமீன்தார்களும் மக்களைப் பயன்படுத்தியும் கொத்தடிமைகளைப் பயன்படுத்தியும் பெரிய அளவிலான கோட்டைகளைக் கட்டினார்கள்.

விழுப்புரம் அரண்மனை


இந்தக் காலத்தில் அதைப்போலவே கட்ட முடியாது. அதிக அளவில் செலவாகும். அதோடு பெரிய இடமும் தேவைப்படும் எனும் எண்ணம் மக்களிடையே தவறாகப் பதிந்துவிட்டது. ஆனால், குறைந்த செலவில் சிறிய இடத்தில் அரண்மனை வடிவில் கட்டடம் கட்ட முடியும் என்பதை வெளிக்கொணரவே இந்த வடிவில் கட்டினேன். இதுவரை சேமித்த சேமிப்பு, நகைகள், நிலம் அனைத்தையும் விற்றேன். சுமார் 65 லட்சம் வரை செலவாச்சு. 

விழுப்புரம் அரண்மனை

இந்தக் கட்டடத்தின் சிறப்பைக் கூறுங்களேன்?

இங்குள்ள ஒரு தூணில் தட்டினால் மற்றொரு தூணில் இசை கேட்கும். அதேபோல் நாம் கீழே உள்ள ஒரு அரையில் பேசினால் மேலே உள்ள மற்றொரு அறையில் பேசுவது கேட்கும். அந்தக் காலத்தில் மைக் இல்லாமல் மன்னர் பேசியது ஆயிரக்கணக்கான மக்களுக்கு எப்படிக் கேட்டதோ, அதே முறையில் ஒரு அறை அமைத்துள்ளேன். நாம் ஒரு முறை பேசினால் ஏழுமுறை ரிதமாக எதிரொலிக்கும்படி 36 டிகிரி ஆங்கிளில் அந்த அறையை அமைத்துள்ளேன். கண்களில் சோர்வைப் போக்கும் வடிவில் பொன் ஊஞ்சலும், முப்பரிமாண புத்தர் சிலையும் உள்ளது. அதுமட்டுமன்றி, மாடி செல்லும் படியில் உள்ள கண்ணாடிகளில் ராஜராஜசோழன் எவ்வாறு ஆட்சி புரிந்தார் என்பதைப் பரதநாட்டிய ஓவியம் மூலம் விவரித்துள்ளேன். இந்த ஓவியத்தை ஒரு பரத நாட்டிய ஆசிரியர் உதவியுடன் செய்தேன். அரண்மனையில் ராணி நின்றுபார்க்கும் இடமான முப்பரிகன் எனும் இடத்தையும் அமைத்து அதன் மையத்தில் 6 லட்சம் மதிப்புள்ள கோமேதகம் பதித்துள்ளேன்.
பழைமையான திரைப்படமான `பத்மாவதி' படத்தின் பத்மாவதி ஓவியத்தைத் தத்ரூபமாக, நாம் எந்த திசையை நோக்கிச் சென்றாலும் நம்மை, அந்த ஓவியம் நோக்கும்படியாக வரையப்பட்டு வைத்துள்ளேன். பொதுவாக அரசிலங்குமரிகள் பெரும்பாலும் அரண்மனையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள்.

விழுப்புரம் அரண்மனை


அரண்மனையில் உயர்ந்த பகுதியான கன்னிமாடத்திலிருந்து உலகின் அழகை ரசிப்பார்கள். அத்தகு வடிவில் 4 கன்னிமாடங்களை அமைத்துள்ளேன். இந்தக் கன்னிமாடங்களை ஜஹாங்கீர் பயன்படுத்திய ஆர்ச்சு வடிவத்தைக் கொண்டு வடிவமைத்துள்ளேன். இந்த வீட்டை முழுவதுமாகக் கட்டி முடிக்க எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

விழுப்புரம் அரண்மனை

தங்களது எதிர்கால ஆசை என்ன?

கட்டடக்கலை பயிலும் மாணவர்கள், இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல நவீன கல்வி பயின்றாலும், தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் எப்படி அரண்மனைகள் கட்டப்பட்டன எனத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் மாணவர்களுக்கு நான் அறிந்தவற்றை விளக்கத்துடன் எடுத்துக்கூற வேண்டும் என்பதுதான்.அதுவும் எப்போது வேண்டுமானாலும்” என இனிய முகத்தோடு கூறிமுடித்தார் கனகவேல். அதோடு கட்டடத்தின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் கண்ணெதிரே விவரித்தும் காட்டினார்.

கனகவேலின் எதிர்கால ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள் எனக் கூறி அங்கிருந்து பயணப்பட்டோம்.