``மாற்றான் கொடுத்ததை `பெயராக', `மதமாக' கொள்வது அறியாமை!" - `இந்து' சர்ச்சை குறித்து கமல் மீண்டும் விளக்கம் | Kamal Haasan again interpreted about hindu controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (17/05/2019)

கடைசி தொடர்பு:18:55 (17/05/2019)

``மாற்றான் கொடுத்ததை `பெயராக', `மதமாக' கொள்வது அறியாமை!" - `இந்து' சர்ச்சை குறித்து கமல் மீண்டும் விளக்கம்

சர்ச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார்.

கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது , ``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’ எனத் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சில இந்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், பிரதமர் மோடியும், சில பிரபலங்களும் கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். தான் பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை எனக் கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாகக் கமல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நேற்று அரவக்குறிச்சியில் நடந்த கமல் பொதுக்கூட்டத்தில் கல், முட்டை போன்றவை வீசப்பட்டன. இந்த நிலையில், இது தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முயல்கின்றது மத்திய, மாநில அரசு. மக்கள் எடுத்துவிட்ட முடிவைத் தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன்பு ஆள வந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். 

கமல்

நமக்கெனப் பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது அறியாமை. நாம் இந்தியர் என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் என்றாலும் காலம் கடந்து வாழக்கூடியது. நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். கூடி வாழ்தல் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். கோடி என்ற உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி. தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க