“ஒரு கீற்றுக்கு 75 பைசா... கேள்விக்குறியான வாழ்வாதாரம்!’’ - குமுறும் தொழிலாளி #MyVikatan | Poor Wage workers family struggling for their daily needs

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (17/05/2019)

கடைசி தொடர்பு:20:35 (17/05/2019)

“ஒரு கீற்றுக்கு 75 பைசா... கேள்விக்குறியான வாழ்வாதாரம்!’’ - குமுறும் தொழிலாளி #MyVikatan

இன்று நகரவாழ்க்கை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கட்டடக்கலை மாறிக்கொண்டிருந்தாலும், கிராமப்புறங்களில் குடிசை வீடுகளின் எண்ணிக்கையோ ஏராளம். அத்தகு குடிசை வீடுகளுக்குப் பனைமரத்தின் ஓலைகளும், தென்னை மரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட ஓலைகளும் இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் தென்னை மரத்தின் ஓளைகளை முடைந்து வாழ்ந்துவரும் அம்மக்களை காண்பதற்குச் சென்றோம்.

கீற்று தொழிலாளி

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்துக்கு உட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் உயர்ந்தோங்கிய மாடி வீடுகளின் மத்தியில் ஒரு சிறிய குடிசை வீட்டின் அருகே அக்னி வெயிலின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தென்னைமரத்தின் கீற்றுகளை முடைந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. நாங்கள் அங்கு சென்றவுடன் “நீங்கள் யார்?” என்று சிறு கேள்வியும் கேட்காமல் தான் அருந்த வைத்திருந்த கூழை எடுத்து, குடிக்கிறீர்களா! எனக் கேட்டு இனிய முகத்தோடு வரவேற்றார் பச்சையம்மாள்.

அவர்களிடம் அதைத் தொடர்ந்து பேசத் தொடங்கினோம். “நான் இந்தத் தொழிலை சுமார் 10 வருடத்துக்கும் மேலாகச் செய்து கொண்டுவர்றேன். இந்தக் கீற்றுகளை எல்லாம் நாங்கள் காசு கொடுத்துதான் வாங்குகிறோம். ஒரு கீற்றை 2 ரூபாய்க்கு வாங்குவோம். அதுமட்டுமல்லாமல், கீற்றை மரம் ஏறி வெட்டுபவர்களுக்கு கூலி,வீட்டுக்கு ஏற்றிவர வண்டிக்குக் கூலியும் இருக்கு. தினமும் காலையில் எழுந்து என் வீட்டில் வேலை அனைத்தையும் சீக்கிரமாக முடித்துவிடுவேன். அதைத் தொடர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கூலிக்கு வீட்டுவேலைக்குச் செல்வேன்.

கீற்று தொழிலாளி


வீடு திரும்ப 9 மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் இருந்து கீற்றை முடையத் தொடங்கிடுவேன். ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு 100 கீற்றுகளை முடைந்திடுவேன். முடைந்த கீற்றுகளை வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு வாங்கிப்பாங்க.
100 கீற்றை 330 ரூபாய்க்கு தருவேன். அவர்களை விட்டாலும் யாரும் வந்து வாங்கவும் மாட்டாங்க. அதனால் அவர்களிடம் விலை ஏற்றி தாருங்கள் எனவும் கேட்க முடியாது. ஒரு முடைந்த கீற்றை விற்பனை செய்தால் கீற்றை வாங்க முதலீடு, வாகன செலவு போக 75 பைசாவிலிருந்து 80 பைசா வரை கிடைக்கும்.

கீற்று தொழிலாளி
 

இந்த வருமானம் அன்றாட செலவுகளுக்கு ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும். பற்றாக்குறைக்கு வட்டிக்கு பணம் வாங்கிதான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 27 வருடம் ஆகுது. அப்போதெல்லாம் இந்த இடம் முழுக்க முழுக்க நெல்வயலாகத்தான் இருக்கும். அதனால் அப்போதெல்லாம் நாற்றுநட, களை பறிக்க, அறுவடை என வேலை இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால், கடந்த 10 வருஷத்துக்கு முன்னாடி இங்கிருந்த எல்லா நிலத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாங்க. அதிலிருந்து வேலை கிடைக்காமல் போனதால் கீற்று முடைந்துதான் பிழைப்பை நடத்திக்கொண்டு வர்றேன். என் கணவருக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நுரையீரல்ல ஏதோ பாதிப்பு என்று ஆஸ்பத்திரில சொல்லிட்டாங்க. அதிலிருந்து அவரும் வேலைக்குப் போக முடியாம போச்சு. அவரும் அவரால் முடிந்த அளவுக்கு எனக்கு கீற்றை முடைய உதவுவாரு. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் இருந்தும் எந்தப் பயனும் இல்லை” எனக் கூறிய பச்சையம்மாளிடம்.

நீங்க ஊரக வேலைக்குப் போறீங்களா எனக் கேட்டோம். “தம்பி, நாங்களும் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமம்தான். ஆனா, எங்க ஊர்ல இதுவரைக்கும் அந்த ஏரி வேலை என்பதையே நாங்கள் செய்ததில்லை. ஆனால், எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருக்கிற மக்கள் எல்லாம் வேலைக்குப் போகிறார்கள். நாங்க என்ன பாவம் செய்தோம். இதுவரை கீற்றை முடைந்தும், பற்றாக்குறைக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பு நடத்திக்கொண்டு வர்றோம். எங்களை ஊக்குவிக்கவும் ஆட்களும் இல்லை. தம்பி உங்கலால் ஆவது எங்களுக்கு நல்லது நடக்குமா?” என்று கேள்வியோடு முடித்தாங்க பச்சையம்மாள். அவங்க வாழ்வாதாரம் உயர நாமும் உதவுவதற்கு முன் வருவோம்.