கோவை அருகே வெடி வைத்து யானையைக்கொன்ற நபர் - கைது செய்த வனத்துறை! | Man arrested for killing Elephant cub in Covai forest range

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/05/2019)

கடைசி தொடர்பு:21:38 (17/05/2019)

கோவை அருகே வெடி வைத்து யானையைக்கொன்ற நபர் - கைது செய்த வனத்துறை!

கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடியை வைத்துக் குட்டி யானையைக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், அவுட்டுக் காய் என்ற நாட்டு வெடியைக் கடித்ததால் குட்டி யானை ஒன்று இறக்க நேரிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவை வனச் சரகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த வழக்கில் தொடர்புடைய சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த செங்கா (எ) ராஜேந்திரன் தப்பியோடிவிட்டார். அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதமே அவரைக் கைதுசெய்யத் தனிக் குழு அமைத்துத் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. இருந்தும் பிடிபடாமல் தப்பித்துக்கொண்டிருந்தவர், இன்று (17.5.2019) காலை சுமார் 8.40 மணிக்கு கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

யானையைக் கொன்றவர் கைது

இன்று காலை கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர், வனக் காப்பாளர், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் குட்டியானையைக் கொன்ற வழக்கில் தேடப்படும் செங்கா (எ) ராஜேந்திரன் என்று உறுதியானது. அவர் கைதுசெய்யப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.