`விலங்குகளுக்கும் தாகம் எடுக்கும்ல!’ - மன்னார்குடி பெண்ணின் புதுமுயற்சி #MyVikatan | Water for voiceless initiative started by mannargudi girl

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:22:03 (17/05/2019)

`விலங்குகளுக்கும் தாகம் எடுக்கும்ல!’ - மன்னார்குடி பெண்ணின் புதுமுயற்சி #MyVikatan

நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கான ஆதாரம். கடுமையான கோடையில், நீர்ப் பற்றாக்குறையால் பல இடங்களில் குடிநீருக்கே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Water for voiceless
 

மனிதர்களுக்கே இப்படியென்றால், நிலையில்லாத காலநிலை மாற்றம் மற்ற உயிர்களின் நீர் ஆதாரங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக வலைதளங்கள் உட்பட உயிரினங்களின் தண்ணீர் தேவை குறித்த பேசுபொருள் நிலவினாலும், அதற்கான தீர்வை நோக்கி முயன்றிருக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த 'ஷாந்தினி'. 'Water for Voiceless' என்ற பெயரில் நாய், குருவி உட்பட நம் எதிரே நீருக்காகப் போராடும் உயிரினங்கள், சுலபமாக நீர் அருந்தும் வகையில் ஒரு நீர்த்தொட்டியைத் தயார் செய்கிறார். இதைப் பல இடங்களில் இலவசமாக விநியோகம் செய்தும் தன்னார்வலர்களுக்கு வழங்கியும் வருகிறார்கள் இவரும் இவரது குழுவும். இது மன்னார்குடி வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுகுறித்து அவரிடம் பேசினோம்,

Water for voiceless

'நான் MBA படித்திருக்கிறேன். உயிரினங்கள் மீதான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுப்பட்டுவருக்கிறேன். சாலையில் அடிப்பட்டு, ஆதரவில்லாமல் இருக்கும் நாய், பூனை போன்ற விலங்குகளைச் சிகிச்சைக்கு உட்படுத்தி, அதை மீண்டும் அந்த இடங்களில் சேர்த்துவிடுவேன். அப்படி, தற்போது கண் பார்வையற்ற, கைகால் ஊனமுற்ற நாய் மற்றும் பூனைகள் 15-க்கும் மேல் வளர்த்து வருகிறேன். தொடர்ந்து நாய்களை அடித்துக் கொல்வது போன்ற உயிர் வதைகளுக்கு எதிராக மன்னார்குடியில் இயங்கிவருகிறேன். கோடைக் காலத்தில், தண்ணீரின் நெருக்கடியால் விலங்குகள் இறந்துபோவது நடந்துவருகிறது. அதன் நிலைகளைப் பற்றி நாம் பெரும்பாலும் கவலைப்படுவதே இல்லை. கொளுத்தும் வெயிலில் நிழலுக்கு ஒதுங்கினால்கூட துரத்தி விடுகிறோம். பிற மாநிலங்களில் விலங்குகளுக்குத் தொட்டி வைத்து தண்ணீர் கொடுப்பதை வீடியோவில் பார்த்திருக்கிறேன். நம் ஊரிலே, இலவசமாகத் தண்ணீர்த்தொட்டி வழங்குவதாக விளம்பரம் செய்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்றும், நகரத்தில் இருப்பவர்களுக்கே போதவில்லை என்று கூறி எனக்குக் கிடைக்கவில்லை.'

Water for voiceless

``அப்போதுதான் ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். தொட்டி வைக்க விரும்புபவர்கள், விலங்குகள் ஆர்வலர்கள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தேன். என் நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பண உதவி பெற்று, சிமென்ட் தொட்டி செய்யும் இடத்தில், இநந்த் தொட்டியை ஏதுவாக உருவாக்கினேன். தொட்டி வேண்டும் என்பவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தே வழங்கினேன். 'வாங்குபவர்கள் அலட்சியப்படுத்தாமல் எப்போதும் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளாதவர்களுக்குத் தொட்டி இல்லை என்றேன். பலரும் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். ஆரம்பத்தில், இது தேவையா என்று பலர் கூறினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுப்பெற்று, பலரும் பாராட்டுகிறார்கள்' என்கிறார்.

முதல்கட்டமாக 50 தொட்டி என்று தொடங்கிய இவர் பணி, இப்போது மன்னார்குடி - தஞ்சாவூர் என்று பலரின் வேண்டுகோளின் பேரில் அடுத்தடுத்து பரவலாகிறது. இதற்குப் பெறுபவர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமோ பணம் பெறவில்லை. விலங்குகள் மீதான தன் அக்கறையின் வெளிப்பாடாகவே இதைச் செய்கிறார். விலங்குகளை ஒரு இடத்தில்கூட அஃறிணையோடு குறிப்பிடாமல் பேசும் ஷாந்தினி, 'எல்லா உயிர்களுமானதுதான் இந்த உலகம். விலங்குகள் அழிவை நோக்கிச் செல்லும்போது, அவர்களை மீட்பதற்கான பொறுப்புணர்வு நமக்கு உள்ளது'' என்கிறார்.