சிங்கம் சிங்கிளாதான் வரும்.. 5-வது முறையாகத் தேர்தல் களம் கண்ட முத்துராஜா! #MyVikatan | freedom fighter contesting in election for 5th time

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (18/05/2019)

கடைசி தொடர்பு:07:40 (18/05/2019)

சிங்கம் சிங்கிளாதான் வரும்.. 5-வது முறையாகத் தேர்தல் களம் கண்ட முத்துராஜா! #MyVikatan

மிகுந்த பரபரப்புக்கிடையே 2019-நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ஒருபுறம் காஸ்ட்லி கட்சிகளின் வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுக்கப் பிரசார வாகனங்களில் பிரசாரம் செய்துகொண்டு இருந்தனர். அந்தச் சமயத்தில்தான் தன்னந்தனியாக சுற்றி வந்து கொண்டிருந்தது ஒரு ஜீப். அந்த ஜீப்பில் வந்தது வேறு யாருமில்லை. சுதந்தரப் போராட்டத் தியாகி அரிமளம் சுப்பிரமணியன் முத்துராஜா(80).

சுதந்திர போராட்டத் தியாகி

அகில இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தள்ளாத வயதிலும், தளராமல் பிரசாரம் மேற்கொண்டார். புதுக்கோட்டை தடத்தில் அதிகமான ரயில்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன். வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் எனப் பல ஹைலைட்டான திட்டங்களை அறிவித்தார். காஸ்ட்லி கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்த இடங்களுக்கு எல்லாம் முத்துராஜாவும் சென்றார். காஸ்ட்லி கட்சி வேட்பாளர்களுக்கு வரவேற்பு கிடைத்ததோ இல்லையோ இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சுதந்திரப் போராட்ட தியாகி

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். சுதந்தரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம், விலைவாசி ஏற்றம் போராட்டம் என அத்தனை போராட்டங்களிலும் சிறை வாசல் சென்று வந்துள்ளார். காமராஜரின் பாராட்டைப் பெற்ற இவரை அப்போது போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக ஊர் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

மக்களுக்கு நல்ல தலைவராக இருந்ததால், அடுத்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்' என்பது இவரது ஆசை. ஆனால், அந்த வாய்ப்பைக் கட்சி கொடுக்கவில்லை. அதனால், சுயேச்சையாகத் தேர்தலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.

சுதந்திர போராட்டத் தியாகி

இதுவரையிலும் 4 முறை எம்.எல்.ஏ-க்காகவும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து 5 முறை எம்.பி-க்காகவும் நின்றுள்ளார். இதில், நாளாவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் நின்றவர் 4,000 வாக்குகளை வாங்கி இருந்தார். வெறும் வேட்புமனுத் தாக்கல் செய்வதுடன் நின்றுவிடாமல், தள்ளாத வயதிலும் ஓட்டு கேட்டு தொகுதி முழுவதும் பம்பரமாக சுழல்கிறார். தொடர்ந்து தேர்தல் செலவுக்காக ஏதாவது ஒரு சொத்தை அடைமானம் வைத்துச் செலவு செய்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது இடத்தைப் பிடிப்பேன், அடுத்த தேர்தலில் நிச்சயம் எம்.பி ஆகி விடுவேன் என்று நம்பிக்கை பொங்கக் கூறுகிறார் தியாகி முத்துராஜா.