கால் வலி சரியாகணும்! - அய்யனாருக்கு காலணிகளைக் காணிக்கையாக்கும் கிராமம் #MyVikatan | Slippers has been given as offerings to God at cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (18/05/2019)

கடைசி தொடர்பு:10:05 (18/05/2019)

கால் வலி சரியாகணும்! - அய்யனாருக்கு காலணிகளைக் காணிக்கையாக்கும் கிராமம் #MyVikatan

கடவுளுக்குக் காணிக்கையாக முடி, பணம், நகை பொருள்கள் அளிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், காலணியை காணிக்கையாக அளிக்கும் விநோதப் பழக்கம் திட்டக்குடி அடுத்து கொற்கை அய்யனார் கோயிலில் உள்ளது. 

அய்யனார்


இந்துக்கள் தனது குடும்பக் கஷ்டம், கடன் பிரச்னை, கல்வி, வேலைவாய்ப்பு, திருமணத் தடை, குழந்தை பாக்கியம் என எதை எடுத்தாலும் கடவுளிடம் வேண்டிக்கொண்டு அதைக் காணிக்கையாக நிறைவேற்றுவது வழக்கம். காணிக்கைகள் பல விதம். அது முடிகாணிக்கை, நகை, பணம், பொருள்கள் எனப் பல விதங்களில் செலுத்துவது வழக்கம். ஆனால், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொற்கை அய்யனார் கோயிலில் காலணியை கடவுளுக்குச் செலுத்தும் விநோதப் பழக்கம் பக்தர்களிடம் உள்ளது.

அய்யனார்

நாம் கோயில், வீட்டுக்குச் செல்லும்போது காலணியை வெளியே விட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனால், கொற்கை அய்யனார் கோயிலில் உள்ள கருப்புசாமிக்கு பக்தர்கள் புதிய காலணியை வாங்கி காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

அய்யனார்

இது குறித்து பக்தர்களிடம் கேட்டதற்கு, ``அய்யனார் கோயிலில் காவல் தெய்வமாக கருப்புசாமி உள்ளார். இப்பகுதியில் காடுகள் உள்ளதால் காட்டில் உள்ள விலங்குகளால் விளை நிலங்களில் விளையும் பயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டி கருப்புசாமிக்கு சால்வை காணிக்கையாக அளிப்போம். அதேபோல் கால்களில் வலி, ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அது நீங்க இங்கு வந்து கருப்புசாமியை வேண்டிக்கொண்டு புதிய காலணியைக் காணிக்கையாகச் செலுத்துவோம். அப்படிச் செய்யும்போது எங்களின் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.'' இவ்வாறு பக்தர்கள் கூறினார்கள். கொற்கை அய்யனார் கோயிலில் வெளி பிராகாரத்தில் உள்ள கருப்புசாமிக்கு அருகில் உள்ள மரத்தில் காலணி காணிக்கையைப் பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.