திடீரென வந்த கார்; சோதனைச் சாவடிக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து - காயத்துடன் தப்பிய காவலர்! | The tourist bus entered the police checkpoint

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (18/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (18/05/2019)

திடீரென வந்த கார்; சோதனைச் சாவடிக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து - காயத்துடன் தப்பிய காவலர்!

பரமக்குடி அருகே போலீஸ் சோதனைச் சாவடிக்குள் சுற்றுலாப் பேருந்து புகுந்ததில் காவலர் ஒருவர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்த்திபனூர் அருகே போலீஸ் சோதனை சாவடிக்குள் நுழைந்த சுற்றுலா பேருந்து

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழியாகச் செல்லும் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் போலீஸ் சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. பார்த்திபனூர் அருகே உள்ள சூடியூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது காரில் மகன் மோகனசுந்தரத்துடன் சென்று பார்த்திபனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். இதன் பின்னர் தனது காரை நான்கு வழிச் சாலையில் உள்ள மாற்றுப்பாதை வழியாக இயக்கியுள்ளார். 

அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று ஜெயராமனின் காரில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் நான்கு வழிச் சாலையில் இருந்த போலீஸ் சோதனைச் சாவடிக்குள் புகுந்தது. இந்தத் திடீர் விபத்தில் போலீஸ் சோதனைச் சாவடியில் காவல் பணியில் இருந்த காவலர் சதீஷ்குமார் காயமடைந்தார். 

மேலும் காரில் சென்ற ஜெயராமன், மோகனசுந்தரம் மற்றும் கேரள பேருந்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்தை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் சோதனைச் சாவடிக்குள் பேருந்து புகுந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைச் சாவடியினுள் ஒரு காவலர் மட்டுமே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.