நகராட்சியின் மெத்தனப் போக்கு - தள்ளாட்டத்தில் முடிந்த மாயூரநாதர் வைகாசி விசாக தேரோட்டம்! | Mayuranadha temple Vishaka car festival held in grand manner

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (18/05/2019)

கடைசி தொடர்பு:10:53 (18/05/2019)

நகராட்சியின் மெத்தனப் போக்கு - தள்ளாட்டத்தில் முடிந்த மாயூரநாதர் வைகாசி விசாக தேரோட்டம்!

நடக்குமோ.. நடக்காதோ.. என்று பக்தர்களைப் பெரிதும் எதிர்பார்க்க வைத்த மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்  ஒருவழியாய் நடந்து முடிந்தது.

தேரோட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஸ்ரீஅபயாம்பிகா சமேத ஸ்ரீமாயூரநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய திருவிழாவான வைகாசி வசந்த உற்சவ பெருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மே 9-ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து நான்கு மாடவீதிகளிலும் தினமும் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 17 -ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர் வலம் வரும் மாயூரநாதர் வடக்கு வீதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த வீதியில் கடந்த ஓராண்டாகவே அடிக்கடி சாக்கடைக் குழாய் உடைவதும், கழிவுநீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்படுவதும், திடீர் பள்ளம் உருவாவதும் தொடர்கதையாகவே இருந்தது. 

தேரோட்டம்

நகராட்சியின் மெத்தனப் போக்கால் உடனடியாக இதை நிரந்தரமாக சீர் செய்ய முடியவில்லை. மீண்டும் தற்போது இந்தச் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுமா... என்ற கேள்விக்குறி பக்தர்களிடையே எழுந்தது. எனவே, `எக்காரணத்தை முன்னிட்டும் தேரோட்டம் தடைபடக் கூடாது. அதற்குள் சாலையை சீர்படுத்தித் தரவேண்டும்' என்று பக்தர்கள் சார்பில்  நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக  இரவு பகலாக பணி செய்து தேர் சுற்றி வரும் அளவுக்கு சாலையின் ஒரு பக்கமாக நேற்றுமுன்தினம் மாலைதான் சீர் செய்து முடித்தார்கள். எனவே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேரோட்டம் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கியது. பஞ்ச மூர்த்திகளான ஸ்ரீஅபயாம்பிகை, ஸ்ரீமயூரநாதர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய திருமேனிகள்  அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பள்ளம் ஏற்பட்ட வடக்கு வீதியில் மட்டும் ஒரு பக்கமாக சற்று எச்சரிக்கையுடன் தேர் வடம் இழுக்கப்பட்டு, தள்ளாட்டத்துடன் தேர் மெதுவாக நகர்ந்தது. எப்படியோ தடைபடாமல் தேரோட்டம் நடந்து முடிந்ததில் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே.