``தொழிலில் நஷ்டம்; ஏறிக்கொண்டே சென்ற கடன்!” - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை | family members suicide after lost in business

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (18/05/2019)

கடைசி தொடர்பு:13:10 (18/05/2019)

``தொழிலில் நஷ்டம்; ஏறிக்கொண்டே சென்ற கடன்!” - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கந்துவட்டி காரணமாக நாகர்கோவிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

நாகர்கோவில் வஞ்சிமார்த்தாண்டன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). இவர் வடசேரியில் சிகரெட், பிஸ்கட் போன்றவை மொத்த வியாபாரம் செய்யும் ஏஜென்சீஸ் நடத்தி வந்தார். இவருக்கு தொழில் நஷ்டத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக தினமும் காலை ஏஜென்சியைத் திறக்கச் செல்லும் சுப்பிரமணி இன்று செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் சுப்பிரமணிக்கு போன் செய்துள்ளார்கள். யாரும் போனை எடுக்காததால் ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்றார்கள். வீடு பூட்டப்பட்டிருந்தது.

விசாரணை

உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்களும், ஊழியர்களும் ஜன்னல் கம்பியை அறுத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சுப்பிரமணி, அவரது மனைவி ஹேமா(48), மகள் சிவானி(20), தாய் ருக்மணி (72) ஆகியோர் படுக்கை அறையில் இறந்துகிடந்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுப்பிரமணி கந்துவட்டிக்குப் பணம் வாங்கியிருப்பதாகவும், கடன் அதிகரித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இறந்த சிவானி குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் நான்குபேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.