அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் வீட்டில் கொள்ளை - வடமாநிலத்தவரின் கைவரிசையா? | robbery in The DMK District secretary house

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/05/2019)

கடைசி தொடர்பு:13:53 (18/05/2019)

அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் வீட்டில் கொள்ளை - வடமாநிலத்தவரின் கைவரிசையா?

தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சிவசங்கர் வீட்டில் நடந்த திருட்டில் 5 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க மாவட்டச் செயலாளர் வீட்டிலேயே கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வட மாநிலத்தவர்களின் கை வரிசையா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக மா.செ

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ- வுமான சிவசங்கரின் வீடு உள்ளது. இவருடைய தந்தை முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் ஆவார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அரியலூரில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இன்று ஆண்டிமடத்திலுள்ள அவருடைய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அருகில் உள்ளவர்கள் சிவசங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து ஆண்டிமடம் காவல்துறைக்கும் புகார் செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 சவரன் நகை,10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையர்களின் அடையாளங்கள் சேகரிக்கும் வகையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலைகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களால்தான், இந்த மாவட்டத்தில் பல திருட்டு மற்றும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இன்றளவும் பல வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால் வடமாநிலத்தவர்களின் மீதும் தங்களது பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள் காவல்துறையினர்.