``அந்த மரணம் எங்கள் குடும்பத்தையே உலுக்கியது!" - ஈழ நினைவு குறித்து எழுத்தாளர் தமயந்தி | Writer Dhamayanthi Shares About Mullivaaikal Issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (18/05/2019)

கடைசி தொடர்பு:18:18 (18/05/2019)

``அந்த மரணம் எங்கள் குடும்பத்தையே உலுக்கியது!" - ஈழ நினைவு குறித்து எழுத்தாளர் தமயந்தி

2009 மே 17 அன்று இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரத்தை யாராலும் எளிதில் மறந்திட முடியாது. 2009-க்குப் பிறகு அம்மக்களுக்கு ஏற்பட்ட பெரும் துயரத்தின் சாட்சியங்களாக நிறைய படைப்புகள் வெளிவந்தன. பத்தாண்டுகளாகிவிட்ட அத்துயரத்தைப் பற்றி எழுத்தாளர் தமயந்தி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார். 

தமயந்தி

``என்னுடைய அப்பா இலங்கைதான். அப்பாவுடைய தாய் மாமன் எனது தாத்தா `ரூபவாஹினி'  தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இலங்கை ராணுவம் அவரை `ரூபவாஹினி'யின் வாசலிலேயே சுட்டுக் கொன்றது. அந்த மரணம் எங்கள் குடும்பத்தையே உலுக்கியது. போரின்போது நான் அங்கு இல்லை என்றாலும் போரின் பாதிப்புகளை நான் நன்கு அறிவேன். அங்குள்ள அடிப்படைப் பிரச்னையே சமூக ஒதுக்கீடுதான். கல்வி, வேலை, வாழ்விடம் என அனைத்திலுமே ஈழத் தமிழர்கள் அங்கே ஒதுக்கப்படுகிறார்கள். இங்கே தமிழகத்தில் அதிகமான வட இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, அவர்களுக்கு ஊதியம் குறைவாக இருப்பதால்தான். இது ஒரு வகை சுரண்டல். இலங்கையில் நிகழ்த்தப்படுவதும் அதேபோல ஒரு விதமான சுரண்டல்தான். தமிழக அரசு சரியான முறையில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தடுத்திருக்கலாம்.

தமயந்தி

போர் நிகழ்ந்தபோது  நாங்கள் பதற்றத்துடன் எங்கள் உறவினர்கள், நண்பர்கள் எனப்  பலருக்கும் அலைபேசியில் அழைத்துப் பேசினோம். அப்போது இருந்த உணர்வை விவரிக்க இயலாது. அவர்களின் அலறல் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அந்தப் பதற்றத்தை அரசியல்வாதிகளும் உணர வேண்டும். போர்க்களத்தில் பூக்கள் மலரும் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு. போர்க்களத்தில் பூக்கள் மலராது. போர் நிகழும்போது அதைத் தடுக்காமல், இப்போது அதை வைத்து அரசியல் நடத்துவது ஒரு கொடுமையான பிழைப்புவாதம். இலங்கையை யார் ஆண்டபோதும் இந்தியா பல முறை ஆயுதங்கள் அளித்திருக்கிறது, ராணுவத்தை உதவிக்கு அனுப்பி இருக்கிறது.

தமயந்தி

பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கூடாரங்களில் வேலிக்குள் இருக்கும் பெண்ணின் புகைப்படம் எத்தனை பேரை உலுக்கி இருக்கும். அந்தப் பெண்மணியின் மனநிலை குறித்து யாராவது சிந்தித்தார்களா. அங்கே உள்ள பெண்களின் மனநிலை குறித்து யாரும் பேசவில்லை. அவற்றைக் குறித்து ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் உள்ளேன். அந்தப் பெரும் துயர் நிகழ்ந்து 10 வருடம் ஆகிறது. அவர்களுக்காகத் தமிழக அரசும், தமிழக மக்களும் என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுந்த வண்ணமிருக்கிறது என்றார் வேதனையுடன்.