`கோட்டையில் தேங்கும் கோப்புகள்’ - கொதிப்பில் எடப்பாடி பழனிசாமி! | files pending in secretariat; cm edappadi palanisamy gets angry

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/05/2019)

கடைசி தொடர்பு:17:32 (18/05/2019)

`கோட்டையில் தேங்கும் கோப்புகள்’ - கொதிப்பில் எடப்பாடி பழனிசாமி!

லைமைச் செயலகத்தில் கோப்புகளைத் தேக்கிவைக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியல் ரெடியாகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடி காட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தயாராகிறாராம். முடிவுகளுக்குப் பிறகு, அவரது ஆட்சி இருக்குமா எனக் கிண்டலடிக்கிறது அதிகாரிகள் வட்டாரம்.

தலைமைச் செயலகம் (முதல்வர்)

அன்றாட நிர்வாகப் பணிகள், பணியிட மாற்றங்கள், டெண்டர் பில்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான கோப்புகள் கோட்டையில் கையெழுத்தாகின்றன. சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறைகளில் சில சிக்கலான கோப்புகளும் அதிகாரிகளின் கையெழுத்துக்கு வந்துள்ளன. அவற்றையெல்லாம் கூடுதல், இணை அந்தஸ்திலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் ஓரமாகத் தூக்கிவைத்துவிட்டார்களாம். "மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அந்தக் கோப்புகளைப் பார்த்துக்கொள்ளலாம், தேவையற்ற வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்" என மற்ற அதிகாரிகளுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்கள்.

இவ்விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரையில் சென்றுள்ளது. “எந்தெந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி கோப்புகளை ஒதுக்கி வைத்துள்ளனர் என்கிற பட்டியலைத் தயாரியுங்கள். நம்ம ஆட்சிதான் தொடரப்போகிறது. ரிசல்ட் வந்தவுடன் பார்த்துக்கலாம்” என்று உஷ்ணமாகியுள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளையும் கவனிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தனது ஆட்சி நீடிக்கும் என முதல்வர் உறுதிபடக் கூறியிருப்பது, கோப்புகள் மீதான சுணக்கம் அதிகாரிகளிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இருந்தாலும், ஒருசில அதிகாரிகள் எந்த அதிர்வும் இல்லாமல், “ஆட்சி தொடர்ந்தாதானே நடவடிக்கை பாயும். இவரே நாளைக்கு முதல்வரா இருப்பாரானு தெரியாது” என்று கிண்டலடிக்கிறார்கள். மே 23-ம் தேதிக்குப் பிறகு, கோட்டையில் வேட்டுச் சத்தம் இருக்கிறது. வெடிக்கப் போவது எடப்பாடியா, அதிகாரிகளா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.