சுழலும் சுதர்சன சக்கரத்துடன் உற்சவ மூர்த்தி உலா - கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் தெப்பத் திருவிழா | Chakrapani Temple Festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (18/05/2019)

கடைசி தொடர்பு:18:23 (18/05/2019)

சுழலும் சுதர்சன சக்கரத்துடன் உற்சவ மூர்த்தி உலா - கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

கோயில்களின் நகரமான கும்பகோணத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில் தெப்பத் திருவிழா இன்று இரவு நடைபெறுகிறது. இக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஅமிர்தபுஷ்கரணி திருக்குளத்தில் புதிய முயற்சியாக சுழலும் சுதர்சன சக்கரத்துடன் சக்கரபாணி உற்சவ மூர்த்தி உலா வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பக்தர்கள் செய்துள்ளார்கள். பல நூறு ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தின்போது, தெப்பத் திருவிழா நடைபெறுவது மரபு.

தெப்பத்திருவிழா

சக்கரத்துடன் காட்சி அளிக்கும் சக்கரபாணி சுவாமி, சக்கரத்தாழ்வார், சுதர்சன மூர்த்தி என்ற திருப்பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். ஜலந்தராசுரன் என்னும் அரக்கனை அழிக்க, திருமால் ஏவிய சக்கராயுதம், ஜலந்தராசுரனை வதம் செய்த பிறகு, புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் செய்துகொண்டிருந்த பிரம்ம தேவனின் கையில் வந்து விழுந்ததாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது. வலிமை வாய்ந்த சக்கராயுதத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். சக்கராயுதத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியானது, சூரியனின் ஒளியையே விஞ்சியது.

சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

இதனால் பொறாமை கொண்ட சூரிய பகவான், தனது ஒளியின் அளவை அதிகப்படுத்தினார். அப்போது ஒட்டுமொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டதாம் சக்கராயுதம். சூரியன் தனது கர்வம் நீங்கி, சக்கராயுதத்தை வேண்டியபோது, மூன்று கண்கள், எட்டுக் கைகளுடன் அக்னிப்பிழம்பாக சக்கரபாணி சுவாமி தோன்றியதாகவும், மீண்டும் சூரியன் ஒளி பெற்றதாகவும் புராணங்களில் இவரது புகழ் பாடப்படுகிறது. இன்று நடைபெறும் தெப்பத் திருவிழாவில் சுழலும் சுதர்சன சக்கரத்துடன் உற்சவ மூர்த்தியை உலா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள் ஸ்ரீசுதர்சன பக்தர்கள் பக்தர்கள் குழுவினரும், கோயில் நிர்வாகித்தினரும். எடை குறைவான சக்கரத்தை உருவாக்கி, அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபுஷ்கரணி திருக்குளத்தில் இன்று இரவு சுழலும் சக்கரத்துடன் காட்சி தரப்போகும் சக்கரபாணி சுவாமியைக் காண்பதென்பது மிகப் பெரும் பேரானந்தம் என்கிறார்கள் ஸ்ரீசுதர்சன பக்தர்கள்.