விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்திய அ.தி.மு.க-வினர் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! | admk election meeting in Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (18/05/2019)

கடைசி தொடர்பு:20:34 (18/05/2019)

விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்திய அ.தி.மு.க-வினர் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேர்தல் விதிமுறை


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் எல்லையில் உள்ள வேடசந்தூர் தாலுகா வெள்ளோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க-வினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகள் நடப்பில் உள்ள நிலையில் அனுமதி இல்லாமல் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம் மற்றும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க-வினர் கலந்துகொண்டனர். நாளை அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க-வினரின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ரகசிய கூட்டம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கப் பத்திரிகையாளர்கள் சென்றனர். கூட்டம் நடப்பதை செல்போனில் படம் பிடித்தனர். 

அதிமுகவினர்


இதை அ.தி.மு.க-வினர் கண்டித்தனர். கூட்டம் நடைபெறுவதைப் பற்றி தி.மு.க-வினர் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாகப் பறக்கும் படை. காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்தனர். அதையும் செய்தியாளர்கள் படம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர் போலீஸார் முன்பாகவே பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். இதில்
தினகரன் செய்தியாளர் மணிமாறன் மற்றும் ஜெயா டிவியின் வேடசந்தூர் ஒளிப்பதிவாளர் ரமேஷ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டனர்.

செய்தியாளர்

அங்கிருந்த அ.தி.மு.க தகவல் தொடர்பு அணியினர் அனைத்துப் படங்கள், வீடியோக்களையும் அழித்துவிட்டு செல்போனை திரும்பக் கொடுத்தனர். இந்நிலையில் தினகரன் செய்தியாளர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். 
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த இந்தக் கூட்டம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதற்குத் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க