'உயிர்காக்கும் நதியான தாமிரபரணி நோய்ப்பரப்பும் நதியாக மாறிவருகிறது'- நதியை பாதுகாக்க உறுதிமொழி | the pledge to protect thamirabarani river

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (19/05/2019)

கடைசி தொடர்பு:08:15 (19/05/2019)

'உயிர்காக்கும் நதியான தாமிரபரணி நோய்ப்பரப்பும் நதியாக மாறிவருகிறது'- நதியை பாதுகாக்க உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி நதியின் பிறந்தநாள் பூஜையை முன்னிட்டு தாமிரபரணியை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

தூத்துக்குடி

தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணிதான். நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு மேல் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள பொதிகை மலையில் உருவாகி பல சிற்றாறுகளுடன் இணைந்து  நெல்லைக்கு வந்து கிழக்கே உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம், ஸ்ரீவைகுண்டன், ஆழ்வார்திருநகரி, ஏரல் ஆகிய ஊர்களின் வழியாக 130 கி.மீ வரை கடந்து புன்னாக்காயல் கடலில் கலக்கிறது. இரண்டு மாவட்டத்தின் ஜீவநாடியாக விளங்குகிறது.

’தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, பொன்நிறத்துப் புனல் பெருகும் பொருநை’, ’பாணதீர்த்தம்’ என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது தாமிரபரணி. இந்நதியில் 8 நீர்த்தேக்கங்களும் அவற்றில் 11 கால்வாய்களும் இருக்கின்றன. மலையில் 7 துணை ஆறுகளும், சமவெளியில் 5 துணை ஆறுகளும் என மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தாமிரபரணி நதியால் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தாமிரபரணி

தாகத்தைப் போக்கி, விவசாயத்தையும் செழிக்க வைக்கின்ற தாமிரபரணி நதிக்கு, தாமிரபரணி மகாமத்யத்தின்படி வைகாசி விசாகத்தன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள். மகாமுனி அகத்தியர், இந்நாளில்தான் தாமிரபரணி நதியை உருவாக்கினார் என்பது ஐதீகம். இதே சைகாசி விசாகத்தன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேரப்பேறு பெற்றான் எனப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாக நாளான நேற்று, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் ”தாமிரபரணி நல இயக்கம்” சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தாமிரபரணி நதியை காக்க உறுதிமொழி

நதிக்கரையில் குடத்தில் தாமிரபரணி நீர் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், நதியில் பூக்களைத் தூவியும், மஞ்சள் பொடி, பால் ஊற்றியும் வணங்கினார்கள். பின்னர், தாமிரபரணி நதியைப் பாதுகாக்க உறுதிமொழி  எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், “வடமொழி நூலான தாமிரபரணி மகாமத்யம் கூறியபடி, கடந்த 16  ஆண்டுகளாக வைகாசி விசாகம் அன்று பிறந்தநாள் விழா நடத்தி வருகிறோம். இதுவழிபாட்டு விழா, பிறந்தநாள் விழா எனச் சொல்வதை விட விழிப்பு உணர்வு விழா என்றுதான் சொல்ல வேண்டும்.

உறுதிமொழி

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழுமையாகவும், விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தாகம் தீர்த்து வருகிறது இந்நதி. ஆனால், கடந்த சில வருடங்களாக மணல் கொள்ளையால் ஆங்காங்கே தோண்டப்பட்டதால்  தன் பெருமை இழந்துள்ளது. அத்துடன், சாக்கடைக் கழிவுகளும் கலப்பதால், உயிர்காக்கும் நதியான தாமிரபரணி நோய்ப்பரப்பும் நதியாக மாறி வருகிறது. நதியைப் பாதுகாக்க கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். அத்துடன், பலபகுதிகளில் இந்நதியை ஆக்கிரமித்திருக்கும் அமலைச் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க