கோடை கால பயிற்சி - பள்ளி குழந்தைகளை மகிழ்வித்த கடலோசை வானொலி | radio company conducting summer training for school children.

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (19/05/2019)

கடைசி தொடர்பு:08:40 (19/05/2019)

கோடை கால பயிற்சி - பள்ளி குழந்தைகளை மகிழ்வித்த கடலோசை வானொலி

கோடை கால சிறப்பு பயிற்சி முகாமினை இலவசமாக நடத்தி குழந்தைகளை மகிழ்வித்த பாம்பன் கடலோசை சமுதாய வானொலி நிலையத்தினர்.

கடலோசை


மீனவர்களுக்கான முக்கிய தகவல்கள் மற்றும் பொது தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் நேசக்கரங்கள் என்ற அறக்கட்டளை நிர்வாகத்தினர் சமுதாய வானொலி ஒன்றை நடத்தி வருகின்றனர். கடலோசை வானொலி 90.4 என்ற பெயரில் பாம்பனில் இயங்கி வரும் இந்த வானொலி நிலையத்தின் சார்பில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. 
 

இந்த ஆண்டு கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் குழந்தைகளுக்கான கோடை பயிற்சி முகாம் கடலோசை வானொலி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு கடல்வளம் அவற்றின் பாதுகாப்பு, தோட்டக்கலை, அடிப்படை ஆங்கில பயிற்சி, ஓவியம் வரைதல், நல்ல மற்றும் கெட்ட வகையான தொடுதல் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மீனவர்களுக்கான பாடல்கள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் குறித்தும், நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் செய்முறை விளக்கங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. 

தீவுப் பகுதியில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாமில்  பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.இந்த கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்ற பள்ளிக்குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில்  கடலோசை வானொலி நிர்வாகத்தினர் பயிற்சியின் நிறைவு நாளன்று பரிசுகள் வழங்கி அசத்தினர்.