'ஆதிகால உலோக ஆலை; முதுமக்கள் தாழிகள்'- மங்காபுரம் வடசேரி கண்மாயில் தொல்லியல் எச்சங்கள் | The earliest metal plant found in Srivilliputhur

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (19/05/2019)

கடைசி தொடர்பு:09:30 (19/05/2019)

'ஆதிகால உலோக ஆலை; முதுமக்கள் தாழிகள்'- மங்காபுரம் வடசேரி கண்மாயில் தொல்லியல் எச்சங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரம் வடசேரி கண்மாயில் ஆதிகால உலோக ஆலை மற்றும் முதுமக்கள் தாழிகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொல்லியல் எச்சங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் குறவன்கோட்டை மற்றும் கிருஷ்ணன்கோயில் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைய உள்ள இடத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. எனவே அந்த இடங்களில் தொல்லியல் துறையினர் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவத்தோப்பு பேச்சியம்மன் கோயில் அருகிலும் பல தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர் க.துள்ளுக்குட்டி கூறியது, தொல்லியல் எச்சங்கள் இப்பகுதியில் இருப்பது குறித்து சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதனை பார்த்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த பொன். கண்ணன், பா.மாரியப்பன், கோவிந்தன் ஆகியோர் தங்கள் பகுதியிலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மற்றும் ஆதிகாலத்தில் உலோக ஆலைகள் இருந்ததற்கான அடையாளம் இருப்பதாக கூறினர். அதன்படி, அங்கே சென்று பார்த்தபோது காவத்தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு  அருகே ஆதிகாலத்தில் உலோக ஆலை இருந்ததற்கான சான்றுகளாக அரை ஏக்கர் பரப்பளவில் கருப்பு நிறம் கொண்ட மிக கனமான கற்கள் குவியலாக கிடக்கின்றன. கோவிலுக்கு பின்னால் உள்ள வடசேரி கண்மாயில் உடைந்த நிலையில் முதுமக்கள் தாழிகளும், தடிமனான செங்கல், வேலைப்பாடுகளுடன் கூடிய பானை ஓடுகள் மற்றும் பெருமளவில் கல்வட்டங்களும் காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர்

மம்சாபுரம், மங்காபுரம், கிருஷ்ணன்கோவில், விழுப்பனூர் என மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தொன்மையின் அடையாளங்கள் மங்காபுரம் வடசேரி கண்மாயிலும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் இருந்ததைப் போன்ற ஆதிகால மனித நாகரிகத்திற்கான சுவடுகள் இங்கேயும் கிடைக்க வாய்ப்புள்ளன. எனவே, இந்த பகுதிகளை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.