‘தம்பிக்கு அதிக செல்லம்; என்னை உதாசீனப்படுத்தினர்’- மூவர் கொலையில் பகீர் வாக்குமூலம் | parents more attached to brother. man kills parents in tindivanam

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (19/05/2019)

கடைசி தொடர்பு:10:10 (19/05/2019)

‘தம்பிக்கு அதிக செல்லம்; என்னை உதாசீனப்படுத்தினர்’- மூவர் கொலையில் பகீர் வாக்குமூலம்

திண்டிவனத்தில் ஏ.சி வெடித்து உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ் (வயது 60)இவரின் மனைவி கலைச்செல்வி இளையமகன் கௌதமன் ஆகியோர் இந்த விபத்தில் இறந்து போனார்கள். ஆனால், வீட்டில் கிடைத்த பொருள்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. எனவே, இதே வீட்டில் வசித்த ராஜின் மூத்த மகன் கோவர்த்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சொத்துக்காக கோவர்த்தன் தன் பெற்றோர், சகோதரரை பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி உறங்கிக் கொண்டிருந்த அறையில் வெடிக்கச் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.  கோவர்த்தன் பெற்றோரை கொலை செய்ய அவரின் மனைவி தீப காயத்ரியும் உடந்தையாக இருந்துள்ளார். தற்போது, இவர் 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். 

பெற்றோரை கொலை செய்த கோவர்த்தன்

ராஜ் குடும்பத்துக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. கோவர்த்தன் பல தொழில்கள் நடத்தி நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்.. தற்போது, டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்ததால், பெற்றோரிடத்தில் பணம் கேட்டுள்ளார்.. அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். அதோடு, 7 மாதங்களுக்கு முன் கோவர்த்தனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆனால், திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளனர். வரும் ஜூன் 6- ந் தேதி இளைய மகன் கௌதமுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். தான் கேட்ட போது பணம் தராததும் தம்பிக்கு மட்டும் அதிக செல்லம் கொடுப்பது கோவர்த்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, மூவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

கொலை செய்யப்பட்ட ராஜ், கலைச்செல்வி

சம்பவ தினத்தில்,  ஒரே அறையில் பெற்றோர், சகோதரர் உறங்கிய பிறகு, கோவர்த்தன் பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி அதை அறைக்குள் போட்டு வெடிக்கச் செய்தார். அறைக்கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டார். உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கி உயிருக்குப் போராடினார்கள். மற்றவர்கள் அறைக்குள்ளே கருகி விட, தந்தை ராஜ் மட்டும் ஜன்னலை உடைத்து வெளியே வந்து கோவர்த்தனிடம் காப்பாற்றும்படி கதறியிருக்கிறார். மனம் இறங்காத கோவர்த்தன், அப்போது தன் கையில் வைத்திருந்த பாட்டிலால் ராஜின் கழுத்தை அறுத்து  கொலை செய்துள்ளார். ராஜின் கழுத்தில் இருந்த வெட்டுக் காயமும் , அறைக்குள் வீசிய பெட்ரோல் வாசமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கோவர்த்தன் சிக்கிக் கொண்டார். 

கொலை செய்யப்பட்ட கௌதம்போலீசாரிடத்தில் கோவர்த்தன் அளித்த வாக்குமூலத்தில், '' சிறுவயதில் இருந்தே என் தம்பிக்கு பெற்றோர் அதிக செல்லம் கொடுத்தனர். என்னை உதாசீனப்படுத்தினர். என் திருமணத்தை எளிமையாக நடத்தி விட்டு,  தம்பி திருமணத்தை ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். தம்பிக்கு அதிக சொத்தை எழுதி கொடுக்கப் போவதாக என்னிடம் கூறினர். இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், தீர்த்துக் கட்டினேன்'' என்று கூறியுள்ளார்.

திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவர்த்தன், தீபகாயத்ரி சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் சூர்யா நடித்த 'உயிரிலே கலந்தது' படத்தில் தம்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தற்காக ரகுவரன் , சூர்யாவை மலையில் இருந்து தள்ளிவிடுவார். இது போன்று தம்பிக்கு அதிக செல்லம் கொடுத்ததால், பெற்றோருடன் சேர்ந்து சகோதரரையும் கொலை செய்த சம்பவம் திண்டிவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


  

நீங்க எப்படி பீல் பண்றீங்க