‘மக்களின் தீர்ப்பை மாற்றத் தேர்தல் ஆணையம் முயற்சி செய்கிறதோ என்ற அச்சம் உள்ளது’ - முத்தரசன் வேதனை | Muthurasan concerned about the Election Commission

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (19/05/2019)

கடைசி தொடர்பு:11:10 (19/05/2019)

‘மக்களின் தீர்ப்பை மாற்றத் தேர்தல் ஆணையம் முயற்சி செய்கிறதோ என்ற அச்சம் உள்ளது’ - முத்தரசன் வேதனை

தேர்தல் முடிவுகளை அவசரப்பட்டு அறிவித்து விடக்கூடாது எனத் தமிழக தேர்தல் அதிகாரி சொல்லுகிற விதத்தைப் பார்த்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான சதி நடக்கிறதோ என்ற அச்சமும் கவலையும் இருப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். 

முத்தரசன்

அரியலூரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  ‘மகாத்மா காந்தி கோட்சே வால் சுடப்பட்டது குறித்து கமல் கூறிய கருத்தை ஒட்டி, கடந்த சில நாட்களாக மிக மோசமான நிலைமை நிலவி வருகிறது. ஜனநாயகத்தில் கருத்துச் சொல்வதற்கு உரிமை உள்ளது. அதே போல அக்கருத்தை மறுப்பதற்கும் உரிமை உள்ளது. ஆனால் வன்முறைக்கு இடம் கிடையாது. ஆனால் கமலஹாசன் பேசுகின்ற கூட்டங்களில் வன்முறை செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க அரசாங்கம் பா.ஜ.கவோடு கூட்டணியாக இருந்தாலும் கூட சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களிடம் உள்ளது ஆனால் அந்த கடமை தவறி வன்முறையாளர்களுக்கு ஆதரவாகத் தமிழக அரசு செயல்படுவது ஏற்க முடியாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் இல்லை என்றால் கருத்துரிமை கேலிக்கூத்தாகி விடும்.

முத்தரசன்

 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை என்பதில் பெருமளவு அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திலேயே  ஒன்றுபட்டு  இல்லாத நிலையே உள்ளது. இன்றைய தேர்தல் ஆணைய கூட்டத்திலேயே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வில்லை. யாருடைய நிர்பந்தத்திற்கோ கட்டாயத்தின் கீழ் செயல்படுகிறது. அந்த நிர்பந்தத்திலிருந்து தேர்தல் ஆணையம் வெளியே வரவேண்டும் எனத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறோம். அதுபோல் தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி எதிர்க்கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட எந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளை அவசரப்பட்டு அறிவித்து விடக்கூடாது என அவர் சொல்லுகிற விதத்தைப் பார்த்தால் மக்களின் தீர்ப்பை வேறு மாதிரியாக மாற்றுவதற்குத் தேர்தல் ஆணைய  அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொள்வார்களோ என்ற அச்சமும் கவலையும் உள்ளது” என ஆவேசமாகப் பேசினார்.