`நல்லவங்களுக்கு ஓட்டுப்போட்டேன்!’ - 101 வயது மூதாட்டி அசத்தல் பேட்டி | 101 year old lady cast her valuable vote in ottapidaram

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (19/05/2019)

கடைசி தொடர்பு:16:50 (19/05/2019)

`நல்லவங்களுக்கு ஓட்டுப்போட்டேன்!’ - 101 வயது மூதாட்டி அசத்தல் பேட்டி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தள்ளாத வயதிலும் தனியாக வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களித்துத் திரும்பிய 101 வயது மூதாட்டி இசக்கியம்மாள், நல்லவர்களுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
 

வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை முதலாகவே ஆண்களும் பெண்களும் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் 1,15,080 ஆண் வாக்காளர்கள் 1,18,751 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 16 பேர் என மொத்தம் 2,33,847 வாக்காளர்கள் உள்ளனர். 

ஓட்டப்பிடாரம் தொகுதி 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவுக்கான பணியில் 1,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸாரும், 300 துணை ராணுவப்படையினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். 
 

மூதாட்டி அங்கம்மாள்


சுட்டெரிக்கும் வெயிலிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள். வயதானவர்களும் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வருகிறார்கள். மதியம் ஒரு மணி நிலவரப்படி 45 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் அங்கம்மாள் என்ற 95 மூதாட்டி வந்தார். அவரை வாக்குச் சாவடிக்குள் வீல் சேர் மூலம் அழைத்துச் சென்றனர். அவர் வாக்களித்துவிட்டு உற்சாகத்துடன் திரும்பிச் சென்றார். 

101 வயது மூதாட்டி இசக்கியம்மாள்


ஒட்டநத்தம் வாக்குச் சாவடிக்கு 101 வயது நிரம்பிய இசக்கியம்மாள் என்பவர் வந்தார். கண் பார்வை சற்று மங்கிய நிலையிலும் தனியாகவே சென்று வாக்களிக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டு வாக்குப் பதிவு மையத்துக்குள் சென்றார். அங்கு தானாகவே வாக்கைப் பதிவு செய்துவிட்டு மை வைக்கப்பட்ட விரலை உயர்த்திக் காட்டியபடியே உற்சாகமாக வெளியே வந்தார். 

அவரிடம் பேசியபோது, ’’நான் அந்த காலத்து ஆள். எனக்கு 12 வயதிலேயே திருமணம் நடந்துச்சு. என் கணவர், குழந்தைகள் எல்லாம் இறந்துட்டாங்க. உறவினர்கள் பராமரிப்பில் தற்போது இருக்கிறேன். எனக்கு வயது தான் 101 ஆகிறதே தவிர நானாகவே நடந்து செல்ல முடியும். கண் பார்வை மட்டுமே சிறிது மங்கலாக இருக்கிறது. ’கண்ணாடி போட்டால் சரியாகிவிடும்’னு சொன்னாங்க. எனக்கு இஷ்டம் இல்லாததால் கண்ணாடி போடலை. 

எனக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைச்சதில் இருந்து எல்லா தேர்தலிலும் ஓட்டுப் போட்டிருக்கேன். இங்க பிரசாரத்துக்கு வர்றவங்க பேசுறத வாசலில் உட்கார்ந்திருந்தே கேட்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுறாங்க. அவங்க பேசுறத வச்சு யார் நல்லவங்கனு நான் முடிவு பண்ணிருக்கேன். அவங்களுக்கே என்னோட ஓட்டைப் பதிவு செஞ்சேன்’’ என்றபடியே மீண்டும் ஒருமுறை விரலை உயர்த்திக் காட்டினார், இசக்கியம்மாள் பாட்டி.