`நாமக்கல்லில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் மாயம்?!' - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Namakkal Child trafficking case updates

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (19/05/2019)

கடைசி தொடர்பு:19:50 (19/05/2019)

`நாமக்கல்லில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் மாயம்?!' - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமுதவள்ளி

இவர்களில் புரோக்கர்கள் லீலா, செல்வி மற்றும் அருள்சாமி ஆகிய 3 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.இந்த மனு மீதான விசாரணை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் தனசேகரனும், புரோக்கர்கள் தரப்பில் வக்கீல் நல்லசிவனும் வாதாடினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளவழகன் புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் கடத்தல்

இந்தநிலையில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் அருள்சாமி, ஹசீனா உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரேகாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் அருள்சாமி மூலம் கொல்லிமலையில் பிறந்த 2 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்திருப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து ரேகாவை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி, வருகிற 31-ந் தேதி வரை ரேகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். புரோக்கர் ரேகாவுடன் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

ரேகா

கருமுட்டை தானம் பெற்றுக்கொடுப்பதில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்களுக்கும், ரேகாவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே குழந்தைகளையும் விற்பனை செய்து இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரிவித்தனர். இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, 260 குழந்தைகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்திருப்பதும், இதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த 260 குழந்தைகளும் விற்பனை செய்யப்பட்டதா அல்லது அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்களா என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை நாமக்கல் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் தான் கைது செய்யப்பட்டு வந்தனர். ஆனால், முதல்முறையாக வெளிமாநிலத்திலும், அதாவது கர்நாடகாவிலும் குழந்தை விற்பனை செய்யப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டு, பெண் புரோக்கராக செயல்பட்ட அழகுக்கலை நிபுணர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க