முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எம்.பி.யான மாணிக்கம்தாகூர்! - திருமண அழைப்பிதழால் சர்ச்சை | Virudhunagar congress MP candidate manickam tagore in fresh controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/05/2019)

கடைசி தொடர்பு:21:49 (19/05/2019)

முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எம்.பி.யான மாணிக்கம்தாகூர்! - திருமண அழைப்பிதழால் சர்ச்சை

தேர்தல் முடிவுகள் அறிப்பதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்ததுபோல மாணிக்கம்தாகூர் எம்.பி. என அச்சடிக்கப்பட்ட திமுக பிரமுகரின் மகள் திருமண பத்திரிக்கை ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணிக்கம் தாகூர்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு தான் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை தேனி மக்களவை உறுப்பினர் என குறிப்பிட்டு குச்சனூர் கோயிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டன.

பத்திரிக்கை

இந்நிலையில் விருதுநகர் தி.மு.க நகரச் செயலர் ஏ.எஸ்.கே.ரமேஷ்குமார் என்பவரின் மகள் திருமணம் வரும் ஜூன் 9-ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது. அவர்கள் அச்சடித்துள்ள திருமண அழைப்பிதழில் மணவிழா தலைவர் என்ற இடத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயரும், திருமணத்தை நடத்தி வைப்பவர் என்ற இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. முன்னிலை என்ற இடத்தில் மாணிக்கம்தாகூர் எம்.பி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம்தாகூரும், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவின் அழகர்சாமியும், அ.ம.மு.க வேட்பாளராக பரமசிவ அய்யப்பனும் போட்டியிட்டனர். இன்னும் தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்படாத நிலையில் அதற்குள் மாணிக்கம்தாகூர் எம்.பி. என அழைப்பிதழில் அச்சடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `இப்போ தான் தேனி பிரச்சினையே முடிந்துள்ளது. அதற்குள் அடுத்த பிரச்சினையா?' என விருதுநகர் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.