`அவருக்கு சந்தோஷம்னா எனக்கு சந்தோஷம்தான்!' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ரவீந்திரநாத்குமார் | I feel happy, if he is happy - Ravindranathkumar speaks about EVKS Elangovan

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (19/05/2019)

கடைசி தொடர்பு:17:50 (19/05/2019)

`அவருக்கு சந்தோஷம்னா எனக்கு சந்தோஷம்தான்!' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ரவீந்திரநாத்குமார்

கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக, இரண்டு வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் மறு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவினை பார்வையிட வந்த ஆளும், எதிர்கட்சி வேட்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினர். அவர்கள் என்னென்ன பேசினார்கள் என்று பார்ப்போம்.

ஆண்டிபட்டி இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் பேசும் போது, "ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. இந்த மறு வாக்குப்பதிவால் எங்களுக்கு தான் கூடுதல் வாக்குகள் கிடைக்கும். வரும் ஜுன் 3ம் தேதி ஸ்டாலின் முதல்வராவார். ராகுல் பிரதமர் ஆவார். அவர்களிடம் இருந்து தப்புவதற்கு இப்போதே மோடி குகை தேடி அமர்ந்துவிட்டார். ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் ஓடி ஓழிந்துகொள்ள குகை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த குகையும் கிடைக்கப்போவதில்லை!" என்றார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதனைத்தொடர்ந்து தேனி நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "மறு வாக்குப்பதிவு தேனி மாவட்டத்திற்கு தேவையில்லாத ஒன்று. நானும் சரி, மற்ற கட்சியினரும் சரி, யாருமே மறுதேர்தல் வைக்க வேண்டும் என கேட்கவில்லை. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து நாங்கள் பேசிய போது, தேர்தல் ஆணையத்திற்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என தான் கோரிக்கை வைக்கவில்லை என்று கூறினார். ஆக, இது முழுக்க முழுக்க துணைமுதல்வரின் வேலை தான். தன் மகனை டெப்பாசிட் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக மோடியின் காலில் விழுந்து இந்த மறு வாக்குப்பதிவு நடத்துக்கிறார்." என காட்டமாக பேசினார்.

ரவீந்திரநாத்குமார்

இளங்கோவனைத் தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்த அ.தி.மு.க எம்.பி வேட்பாளரும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய போது, "தேனியில் எதற்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என தேர்தல் ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் தெளிவாக விளக்கியுள்ளனர். எதிர்கட்சி என்றாலே விமர்சனம் வைக்கத்தான் செய்வார்கள். கல்வெட்டு விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்த ஒன்று. தவறானது. எனவே அது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறேன். இளங்கோவன் மூத்த அரசியல்வாதி, பல தேர்தலில் களம் கண்டவர். நான் இப்போது தான் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறேன். என்னை விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் என்றால். எனக்கும் சந்தோஷம்.!" என்றார். 

பெரியகுளம் வடுகபட்டியில் காலை வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.