ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு! | police keep vigil in ottapidaram by election constituency

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (19/05/2019)

கடைசி தொடர்பு:16:52 (19/05/2019)

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், பதற்றம் மிகுந்த வாக்குச் சாவடிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப் பதிவு மையங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி-யான முரளி ரம்பா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். 

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருமங்கலம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2,33,847 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இந்தத் தொகுதியில் ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் உள்ளிட்ட 15 பேர் களத்தில் உள்ளனர். 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் 257 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 71 வாக்குச் சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாகவும் 17 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றம் மிகுந்தவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் பதற்றம் மிகுந்தவை எனக் கருதப்படும் வாக்குச் சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 3000 போலீஸாரும் 300 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றம் மிகுந்த வாக்குச் சாவடிகளில் இவர்களுடன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 

இந்தத் தொகுதியில் காலை முதலாகவே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றம் மிகுந்த மற்றும் மிகவும் பதற்றம் மிகுந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான முரளி ரம்பா ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.