கள்ளத் துப்பாக்கியுடன் இருவர்! - வருசநாடு காட்டில் நடந்தது என்ன? | Police captures country made gun in varusanadu forests

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (19/05/2019)

கள்ளத் துப்பாக்கியுடன் இருவர்! - வருசநாடு காட்டில் நடந்தது என்ன?

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றிவருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை, துப்பாக்கியை மட்டும் கொண்டுவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன தான் நடந்தது வருசநாடு காட்டில் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``வருசநாடு மலைப்பகுதியில் வாலிப்பாறையை அடுத்து தாண்டியன்குளம் என்ற மலை கிராம உள்ளது. அங்கு மலையாளி காட்டுப் பகுதியில் சிலர் கஞ்சா மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிவருவதாகத் தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து வருசநாடு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

காட்டிற்குள் பதுங்கியிருந்த இருவரைக் கண்ட போலீஸார், அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். போலீஸாரைப்0 பார்த்த இருவரும் காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை மட்டும் கிழே போட்டுவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. காட்டிற்குள் தப்பி ஓடியதால் அவர்களை துரத்திச் செல்ல முடியாததால், துப்பாக்கியுடன் போலீஸார் திரும்பியுள்ளனர்'' என்றனர்.

தப்பி ஓடியவர்களைப் பற்றிய தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாலிப்பாறையைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 29) மற்றும் தண்டியன்குளம் பெருமாள் என்பவரது மகன் சந்திரன் (வயது 40) ஆகிய இருவரே தப்பி ஓடியவர்கள் என்கிறார்கள் போலீஸார். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது. காட்டிற்குள்  எதற்காக துப்பாக்கியுடன் இருந்தனர். வேட்டையாடுவதற்காகவா, அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்திற்காகவா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.