வரிசை எண் பிரச்னையை சமாளிக்க மாதிரி வாக்கு இயந்திரம்! - சூலூர் அ.ம.மு.க அடடே ஐடியா | Sulur Ammk's model voting machine

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (19/05/2019)

கடைசி தொடர்பு:17:19 (19/05/2019)

வரிசை எண் பிரச்னையை சமாளிக்க மாதிரி வாக்கு இயந்திரம்! - சூலூர் அ.ம.மு.க அடடே ஐடியா

சூலூர் தொகுதியில், வாக்குச் சாவடி அருகே அ.ம.மு.க-வினர், மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்திருந்தனர்.

சூலூர்

சூலூர் உள்பட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடந்தன. சூலூர் தொகுதியில் தி.மு.க-வில் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க-வில் கந்தசாமி, அ.ம.மு.க-வில் சுகுமார் போட்டியிட்டுள்ளனர். இதில், போட்டி அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே என்றாலும் கணிசமான வாக்குகளைப் பிரித்து வெற்றியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அ.ம.மு.க இருக்கிறது. பிரசார வியூகம், பணப்பட்டுவாடா என்று அனைத்து விஷயங்களிலும் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு சவால் விடும் அளவுக்கு அ.ம.மு.க பணியாற்றி வருகின்றனர்.

சூலூர் தொகுதியில் மொத்தம் 324 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அருகே, அதி.மு.க, தி.மு.க,  அ.ம.மு.க பிரமுகர்களே அதிகளவு தென்பட்டனர். வாக்களிக்க செல்லும் மக்களை, தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்வதும், பூத் ஸ்லிப் வழங்குவதும் தான் அவர்களின் பிரதான பணி.  தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் தங்களது சின்னங்களுடன், வாக்களிக்க செல்பவர்களிடம் தங்களுக்கு வாக்களிக்க சொல்லி சிக்னல் காட்டிக் கொண்டிருந்தனர்.

மாதிரி வாக்கு இயந்திரம்

பரிசுப் பெட்டி சின்னத்துடன் இருந்த அ.ம.மு.க பிரமுகர்கள் ஒருபடி மேலே சென்று, மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்திருந்தனர். அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரின் பெயர், வாக்குப்பதிவு இயந்திர வரிசையில் 15-வது இடத்தில் இருந்தது. எனவே, மக்கள் குழம்பிவிடக்கூடாது என்பதற்காக, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம், சுகுமாரின் வரிசை எண்ணை காண்பித்து விளக்கினார்கள். சூலூர் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் இந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களைக் காண முடிந்தது.