ஆளுநருக்காக போக்குவரத்தில் அடிக்கடி மாற்றம்! - ஊட்டி சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி | Police changes traffic over governor's visit in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (19/05/2019)

கடைசி தொடர்பு:21:30 (19/05/2019)

ஆளுநருக்காக போக்குவரத்தில் அடிக்கடி மாற்றம்! - ஊட்டி சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கிவைக்க ஊட்டி வந்த ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நாள்தோறும் சுற்றுலாவில் ஈடுபடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

போக்குவரத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் 123வது மலர் கண் காட்சி துவங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த மலர் மலர்க் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். விழாவைத் துவக்கி வைப்பதற்காக 16ம் தேதி மாலையே ஊட்டி வந்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆளுநர் மாளிகையில் [ராஜ்பவன்] தங்கியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குடும்பத்துடன் நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை காரில் சென்று பார்வையிட்டு வருகிறார். பாதுகாப்பு பணிக்கும் போக்குவரத்தைச் சீரமைக்கவும் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1100 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மலர்க் கண்காட்சியை முதலவர் துவக்கிவைப்பார். நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று பரிசுகளை வழங்குவார்.

ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காரணத்தால் முதல்வர் பங்கேற்கவில்லை.16ம் தேதி கோவையில் இருந்து ஆளுநர் வருகையின்போதே மேட்டுப்பாளையம் - ஊட்டி கோத்தகிரி சாலையில் வழிநெடுகிலும் போலீஸார் நிறுத்தப்பட்டு பல மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தினர். நேற்று முன்தினம் மலர் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர், ஆளுநர் கோப்பைக்கான குதிரைப் பந்தய ஓட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நேற்று முதுமலை மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தைப் பார்வையிட சென்றார். இன்றும் அவலாஞ்சி பகுதிக்குச் சென்றார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மலர் கண்காட்சியைக் காண கடந்த மூன்று நாள்களில் சுமார் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத் தளங்கள், கடை வீதிகள், சாலைகள் எனப் பார்க்கும் இடமெல்லாம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சமயத்தில் ஆளுநர் நாள்தோறும் காரில் பல இடங்களை சுற்றிப் பார்க்கச் செல்வதால் நகரில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. லவ்டேல் ஜங்க்ஷன், தொட்டபெட்டா, பிங்கர் போஸ்ட் போன்ற பகுதிகளில் ஆளுநர் கான்வாய் செல்வதற்காக பல மணி நேரம் போக்குவரத்தைத் தடை செய்கின்றனர். மேலும், நகரைச் சுற்றி 3 கி.மீ. முன்பே இருசக்கர வாகனங்கள் முதல் அரசு பேருந்துகள் வரை பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

போக்குவரத்து

இதுகுறித்து சென்னையைச்  சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கூறுகையில், ``மலர்க் கண்காட்சியைக் காண குடும்பத்துடன் சென்னையில் இருந்து வந்துள்ளோம். நகர் முழுக்க போலீஸார் குவிக்கப்பட்டு, எந்தப் பகுதிக்கு சென்றாலும் 2 மணி முதல் 3 மணி நேரம் நடுரோட்டில் குடிக்க தண்ணீர் கூடை கிடைக்காமல் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. போலீஸாரோ, `ஆளுநர் வாகனம் போகும் வரை காத்திருங்கள்' எனச் சொல்கிறார்கள். ஆளுநர் அவலாஞ்சி செல்கிறார் என்பதற்காக அந்த சாலையில் போக்குவரத்தையே பல மணி நேரம் நிறுத்தினார்கள். இதனால் இவ்வளவு பணம் செலவழித்து ஊட்டி வந்தும் ஒரு சுற்றுலா பூங்காவுக்கு கூட செல்ல முடியவில்லை”என்றார் வேதனையுடன்.