இளைஞர்களை முந்திய முதியோர்கள்; வெயிலை பொருட்படுத்தாத கர்ப்பிணிகள்! - சூலூர் வாக்குப்பதிவு நிலவரம் | People caste their votes in sulur by election

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (19/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (19/05/2019)

இளைஞர்களை முந்திய முதியோர்கள்; வெயிலை பொருட்படுத்தாத கர்ப்பிணிகள்! - சூலூர் வாக்குப்பதிவு நிலவரம்

முதியோர்கள் ஆர்வம் காட்டியதால் சூலூர் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

சூலூர்

தமிழகத்தில் சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. சூலூரில் காலை 7 மணி முதலே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக, முதியோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். செஞ்சேரிப்புத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிப்பட்டி, கம்மாள்பட்டி, கண்ணப்பாளையம் போன்ற பகுதிகளில் மதியம் 12 மணியின்போதே 50 சதவிகித வாக்குகள் பதிவாகிவிட்டன. தொகுதி முழுவதும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும் வாக்குப்பதிவில் பெரிய பின்னடைவு ஏற்படவில்லை.

சூலூர் முதியோர்கள்

இதற்கு முக்கிய காரணம் முதியவர்கள் தான். பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில், இளைஞர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், முதியோர்கள் அதிக எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். அதிலும், 80 முதல் 100 வயது முதியவர்கள் வீல் சேர்களில் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். சில இடங்களில், கர்ப்பிணி பெண்கள், காயமடைந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் கூட சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர்.

சூலூர்

இதனால், சூலூரில் மாலை 6 மணி நிலவரப்படி 79.41 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. சூலூரில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கோவை நாடாளுமன்ற தொகுதியில், அதிக வாக்குகளை பெற்றதும் சூலூர் சட்டமன்ற தொகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.