தேர்தலால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை - எல்லைகடந்து சென்று மதுவாங்கிய குடிமகன்கள்! | The liquor shop closed for election

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/05/2019)

கடைசி தொடர்பு:22:30 (19/05/2019)

தேர்தலால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை - எல்லைகடந்து சென்று மதுவாங்கிய குடிமகன்கள்!

 

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுக்க கடந்த 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதனால் கடந்த மூன்று நாட்களாக மது குடிப்போர் மிகவும் நொந்து போயிருந்தனர். வசதியானவர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று மது அருந்தினார்கள். இன்னும் சிலர் கள்ள மார்க்கெட்டில் விற்கும் மதுவைக் கூடுதல் விலைக்கு வாங்கி அருந்தினர்.

ஆனால், சாமானிய மதுப்பிரியர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான், விரகனூர், ஐராவதநல்லூர் மணலூர் பகுதியை சேர்ந்த சிலர் வாக்களித்துவிட்டு கட்சியினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, நெடுஞ்சாலைக்கு அந்தப்பக்கம் சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் புலியூரில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடை முன் திறப்பதற்கு முன் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த கடை மதுரை மாநகரை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது என்பதால் வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அந்தக்கடை முன் குவிய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியின் எல்லையிலுள்ள பிற மாவட்ட டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. அதை செய்யத் தவறியுள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க