கடந்தமுறையை விடக் கூடுதலாக பதிவான 16 வாக்குகள்! - ஈரோடு மறு வாக்குப்பதிவு ரிப்போர்ட் | 16 votes extra polled in erode re polling

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (19/05/2019)

கடந்தமுறையை விடக் கூடுதலாக பதிவான 16 வாக்குகள்! - ஈரோடு மறு வாக்குப்பதிவு ரிப்போர்ட்

ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் நடத்தப்பட்ட மறு வாக்குப்பதிவில், கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலாக 16 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

தேர்தல்

ஈரோடு மக்களவைத் தொகுதியில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்: 238) ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மொத்தம் 736 வாக்குகள் பதிவாகின. ஆனால், மாலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சீல் வைக்கும் போது மொத்தம் 777 வாக்குகள் பதிவானதாகக் காட்ட, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு தான், காலையில் செய்த மாதிரி வாக்குகளை அழிக்காமல் விட்டதே பிரச்னையாக மாறியிருக்கிறது என அதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பதிவான 736 வாக்குகளோடு அழிக்காமல் விட்ட 50 மாதிரி வாக்குகளையும் சேர்த்தால் 786 வாக்குகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், 777 வாக்குகள் தான் இயந்திரத்தில் பதிவானதாகக் காட்டியது. மீதமுள்ள 9 வாக்குகள் என்ன ஆனது எனத் தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போயினர். அதனையடுத்து ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கதிரவன், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.

தேர்தல்

அதனடிப்படையில், 4 தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்த்து ஈரோடு தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது. அந்தவகையில் இன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் காலையிலிருந்தே பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். மதியம் ஒரு மணி அளவிலேயே 50 சதவிகித வாக்குகள் கிடுகிடுவெனப் பதிவாகின. 920 பேர் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலான வாக்குகள் பதிவாகும் சூழ்நிலை தென்பட்டது. மாலை 6 மணிக்கு முடிந்த வாக்குப்பதிவில் ஆண்கள் 371 பேர், பெண்கள் 381 பேர் என மொத்தம் 752 வாக்குகள் பதிவாகின. இது மொத்த வாக்கு சதவிகிதத்தில் 81.74 சதவிகிதம் ஆகும்.

ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 736 வாக்குகள் தான் பதிவாகியிருந்தன. ஆனால், இந்தமுறை 16 வாக்குகள் கூடுதலாக 752 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.