‘பசுமாட்டுக்கு வளைகாப்பு!’ - கிராம மக்களை ஆச்சர்யப்படுத்திய இளைஞர் | A young man who surprised the people of the village

வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (22/05/2019)

‘பசுமாட்டுக்கு வளைகாப்பு!’ - கிராம மக்களை ஆச்சர்யப்படுத்திய இளைஞர்

காட்பாடியில், இளைஞர் ஒருவர் தனக்கு தங்கையில்லாத குறையைப் போக்குவதற்காக, பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தியிருக்கிறார்.

பசுமாட்டுக்கு வளைகாப்பு

வேலூரை அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த குமார், மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். தனது வீட்டில் வளர்த்துவரும் பசுமாடு ஒன்றை அவர் மஞ்சுவிரட்டு போட்டிக்குப் பழக்கியிருக்கிறார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகளைக் குவித்த தனது மாட்டுக்கு, ‘ஒன் மேன் ஆர்மி’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில், அந்த மாடு சினைக்கு வந்தது. தனது வீட்டில் பெண் குழந்தைகள் இல்லாததாலும் தனக்கு தங்கை இல்லாத குறையைப் போக்குவதற்காகவும் பசுமாட்டை குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்து, ‘வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்த குமார் முடிவுசெய்தார். 

ஊரில், வீடு வீடாகச் சென்று நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். ஆச்சர்யமடைந்த உறவினர்களும் ஊர்க்காரர்களும், நேற்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஊரில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைத்து, மேளதாளங்கள் முழங்க தடபுடலாக வளைகாப்பு நடத்தினார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு தாய் வீட்டார் எப்படி சீமந்தம் செய்வார்களோ அதைப்போலவே தாம்பூலத் தட்டுகளில் பழங்கள், இனிப்புகளை ஊர்வலமாக எடுத்துவந்தனர். பெண்கள் பலர், மாட்டுக்கு சந்தனம், குங்குமம் பூசி சடங்குகளைச் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு, சுவையான பிரியாணி சமைத்து வழங்கினார், குமார். கிராம மக்கள் பசுமாட்டை மனதார வாழ்த்தினர்.