`ரித்தீஷ் மனைவி புருஷன இழந்து தவிக்கிறாங்க, உதவிசெய்யினு சொன்னேன்!'- புகார் குறித்து ஐசரி கணேஷ் விளக்கம் | isari ganesh about Police complaint on him

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (20/05/2019)

கடைசி தொடர்பு:11:06 (20/05/2019)

`ரித்தீஷ் மனைவி புருஷன இழந்து தவிக்கிறாங்க, உதவிசெய்யினு சொன்னேன்!'- புகார் குறித்து ஐசரி கணேஷ் விளக்கம்

முன்னாள் எம்.பி-யும் நடிகருமான ஜே.கே. ரித்தீஷின் மனைவி மற்றும் ஐசரி கணேஷ் மீது கேசவன் என்பவர் போலீஸில் புகார்  கொடுத்திருந்தார். அதில், ``நான் ரித்தீஷிடம் 10 வருடங்களாகப் பணியாற்றிவந்தேன். அவர், பாண்டி பஜாரில் இருக்கும் வீட்டின் சாவியை பராமரிப்புப் பணிக்காக என்னிடம் கொடுத்தார். ஆனால், அதற்கான பணம் எதுவும் தரவில்லை. அதன் காரணமாக, வேலை யாட்கள் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில், ஐசரி கணேஷ் என்னைத் தொடர்புகொண்டு, உடனடியாக வீட்டின் சாவியைக் கொடுக்க வேண்டும் என மிரட்டினார். பின்னர், அந்த வீட்டுக்கு ரித்தீஷின் மனைவி மற்றும் ஐசரி கணேஷ், அடியாள்களுடன் வந்து மிரட்டினார்கள். மேலும், 'பணம் எதுவும் தர முடியாது, வீட்டை காலி செய்துவிடு. இல்லை என்றால் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டினர். அதனால், எனக்கு வர வேண்டிய பணத்தைத் தருவதற்கும் கொலை மிரட்டல் விடுத்ததற்கும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ரித்தீஷ்

இந்நிலையில், கேசவன் கொடுத்த புகார் குறித்து ஐசரி கணேஷிடம் கேட்டபோது, ``நான் யாரையும் திட்ட மாட்டேன்.  யாரிடமும் நான் கோபமாகப் பேச மாட்டேன். நான் கேசவனிடம் பேசியது உண்மைதான். பாவம், அந்த அம்மா புருஷன  இழந்து தவிக்கிறாங்க. உதவிசெய்யினு சொன்னேன். அவருடைய வீட்டின் சாவியைக் கொடுத்துவிடுப்பா என்றேன். அதற்கு அவர், எனக்குப் பணம் தரவேண்டும் என்றார். நான் தரச்சொல்கிறேன், அந்த அம்மா  தரவில்லை என்றாலும்  நான் உனக்கு பணம் தருகிறேன் என்று சொன்னேன். சாவியை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் கொடுத்து விடு என்றேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு என்மீது போலீஸில் புகார் கொடுக்கிறார். நான் அவரைத் திட்டியதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள்” என்றார்.