தினசரி ஊதியம் ரூ.370; ஓய்வுக்குப்பின் வாழ்க்கை கேள்விக்குறி... வேதனையில் நீலகிரி பூங்கா ஊழியர்கள்! | A story related Ooty garden workers

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (20/05/2019)

கடைசி தொடர்பு:17:13 (20/05/2019)

தினசரி ஊதியம் ரூ.370; ஓய்வுக்குப்பின் வாழ்க்கை கேள்விக்குறி... வேதனையில் நீலகிரி பூங்கா ஊழியர்கள்!

தோட்டக்கலைத் துறை பூங்கா மற்றும் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததாலும், கால முறை ஊதியம் வழங்கப்படாததாலும் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

தினசரி ஊதியம் ரூ.370; ஓய்வுக்குப்பின் வாழ்க்கை கேள்விக்குறி... வேதனையில் நீலகிரி பூங்கா ஊழியர்கள்!

ண்டுக்குப் பல கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் பூங்காக்களையும், வண்ண வண்ண மலர்களையும் உருவாக்கும் நீலகிரி பூங்கா ஊழியர்களின் வாழ்க்கை மட்டும் இன்று வரை மலராமலே உள்ளது வேதனைக்குரியதே!

தோட்டக்கலைத் துறை பூங்கா மற்றும் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததாலும், கால முறை ஊதியம் வழங்கப்படாததாலும் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி பூங்கா

நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மூன்று மாதங்களாகச் சீரமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் மலர் அலங்காரங்கள், மலர் பாத்திகள், கண்காட்சிகள் எனப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூக்களையும் அலங்காரங்களையும் கண்டு ரசித்துச் செல்லும் நம்மால், இதற்குப் பின்னால் இரவு பகலாக உழைத்த தொழிலாளர்களின் நிலை பற்றித் தெரிவதே இல்லை.

தமிழகத்தில் நீலகிரி மட்டுமே முழுமையான தோட்டக்கலை மாவட்டமாக உள்ளது. நீலகிரியில் தோட்டக்கலைப் பயிர்களான மலை காய்கறிகள், கொய்மலர்கள், தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலைப் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் குன்னூர் மற்றும் கல்லார் பழப்பண்ணைகள், தும்மனட்டி உட்பட மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைப் பண்ணைகள் உள்ளன. பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

நீலகிரி பூங்கா

இவர்களில், 250 தினக்கூலிப் பணியாளர்களும், 340-க்கும் மேற்பட்ட சிறப்புக் கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களும் உள்ளனர். இவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அதேபோல், சில தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும் அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படுவது இல்லை. பல ஆண்டுகள் இந்தப் பூங்கா மற்றும் பண்ணைகளில் இவர்கள் பணியாற்றி வந்தாலும், அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது, இவர்கள் சிறப்புக் கால முறை ஊதியமே பெற்று வருகின்றனர். இதைக் கொண்டு, அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலிகளாகப் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், மற்ற துறைகளில் வழங்குவதுபோல் காலமுறை ஊதியமோ அல்லது பணி உயர்வோ வழங்கப்படுவதில்லை. அப்போது பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையில் காலமுறை ஊதியம் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை பணி உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.

தொழிலாளர்

மேலும், இதே துறையில் பணியாற்றி வரும் தினக்கூலிப் பணியாளர்களை கடந்த பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், அவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் மட்டுமே பெற்றுவந்தவர்கள், கடந்த பல ஆண்டுகளாகப் போராடி தற்போது அவர்கள் நாள்தோறும் ரூ.370 மட்டுமே பெறுகின்றனர்.

நிரந்தரப் பணியாளர்களாக உள்ள ஊழியர்களின் நிலையும் இதேதான். ஊதிய உயர்வு கிடைக்காத நிலையில், அவர்களும் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். இதைப் பெற்று, அவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் திணறிவருகின்றனர். பலர் 40 வயதைத் தாண்டிய நிலையில், வேறு பணிக்குச் செல்ல முடியாத நிலையில், என்றாவது பணி நிரந்தரம் செய்வார்கள், அரசு வேலைகிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பூங்காக்களில் பணியாற்றி வருகின்றனர். பூங்கா தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, ஓய்வுபெற்றுச் செல்லும்போது எந்தவொரு பொருட்பயனுமின்றி செல்கின்றனர்.

பூக்கள்

இதனால் ஓய்வுக்குப்பின் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. மேலும், தோட்டக்கலைத் துறையில் மஸ்தூர், அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், டிரைவர், இரவுக் காவலர், பதிவு எழுத்தர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணிகளுக்கு இவர்களைப் பயன்படுத்தினாலும், நிரந்தரமாகப் பதவி உயர்வோ அல்லது அதற்குச் சமமான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. ஆனாலும் அவர்கள், மலர்க் கண்காட்சி நடக்கும்போது விழாவைத் தொடக்கி வைக்க வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஓயாமல் மனுக்களை வழங்கிவருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக மலர் கண்காட்சிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்களை அளித்தனர். ஆனால், அவரும் அக்கறை காட்டவில்லை. பூங்கா தொழிலாளர்களுக்கு விடிவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் உள்ளனர்.

இதுகுறித்து பூங்காவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், ``கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பூங்காவில் வேலை செய்துவருகிறேன். மழை, வெயில், பனி என எதையும் பார்க்காமல் என்னைப்போன்ற பலரும் கடுமையாக வேலை செய்துவருகின்றனர். குழந்தைகளை பாதுகாப்பதுபோல மலர்களை கண்ணும் கருத்துமாக மாதக்கணக்கில் பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்கு வைக்கிறோம். பூங்கா முழுக்கப் பூத்திருக்கும் பூக்களுடனேயே பணியாற்றும் எங்கள் வாழ்வு மட்டும் இன்னும் மலரவே இல்லை" எனக் கண்ணீர் வடிக்கிறார்.

பூக்களைப்போன்று பூங்கா தொழிலாளர்களின் வாழ்க்கையும் மலர, அரசு வழிகாட்ட வேண்டும்...


டிரெண்டிங் @ விகடன்