8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா! - சிறைக்கம்பி எண்ணும் காதலன் | Tiruvallur Woman files complaint against lover

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (20/05/2019)

கடைசி தொடர்பு:16:49 (20/05/2019)

8 வருடக் காதலை ஒரே நொடியில் பிரித்த அம்மா! - சிறைக்கம்பி எண்ணும் காதலன்

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் பூமாலையோடு காத்திருந்த காதல் ஜோடி, திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்தனர். தற்போது காதலன் சிறைக்கம்பியை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

காதல் ஜோடி

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரின் கையில் பூமாலை இருந்தது. அவருடன் வந்த உறவினர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுடன் வந்த வாலிபரின் கையிலும் பூமாலை. இதனால் காதல் ஜோடிக்கு காவல் நிலையத்தில் திருமணம் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

இந்தச் சமயத்தில்தான், இந்தக் கல்யாணம் நடந்ததால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று மணமகனின் அம்மா கூறினார். இதனால், காவல் நிலையம் பரபரப்பானது. மணமகன் கையிலிருந்து பூமாலை காவல் நிலைய வாசலிலேயே தூக்கி வீசப்பட்டது. இதனால், மாலையில் உள்ள பூக்கள், காவல் நிலைய வளாகத்தில் சிதறிக்கிடந்தது. அதுபோலதான் காதல் ஜோடியின் காதலும் உதிர்ந்துபோனது. 

என்ன நடந்தது என்று திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டதற்கு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்துள்ளனர். அப்போதுதான் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலாக மலர்ந்தது. அதன்பிறகு காதல் ஜோடி அந்தக் கம்பெனியிலிருந்து வேறு இடத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். அதன்பிறகும் இருவரும் காதலித்துவந்தனர்.

காவல் நிலையத்தில் காதலர்கள்

இந்த நிலையில், காதலனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. இதனால், அவர் வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டார். வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன் என் கழுத்தில் தாலி கட்டிவிடு என்று காதலி கூறியுள்ளார். காதலன் குடும்பத்தில் திருமணத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. `நீ, என்னை திருமணம் செய்யவில்லை என்றால் காவல் நிலையத்துக்குச் செல்வேன்' என்று கூறிய காதலி, எங்களிடம் புகார் கொடுத்தார். அப்போது காதலனை அழைத்து விசாரித்தோம். அவரும் திருமணம் செய்ய சம்மதித்தார். இதனால்தான் மாலையோடு காதல் ஜோடி வந்தனர். அப்போதுதான் மணமகன் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருமணம் நின்றது. அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த காதலனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்றனர். 

காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளுக்கு இடையே நடந்த தகராறைப் பார்க்க அங்கு மக்கள் கூட்டம் கூடியது. அவர்களில் சிலர், தங்களின் செல்போனில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்தனர். அதில், பூமாலையோடு காவல் நிலைய வாசலில் இளம்பெண் காத்திருக்கிறார். அவரைச் சுற்றி உறவினர்கள் நிற்கின்றனர். காவல் நிலையத்தில் வாசல்படியில் மணமகனின் அம்மா, தீக்குளிப்பதாக மிரட்டுகிறார். அப்போது நடந்த தகராறில்  மணமகனின் கையிலிருந்த மாலை, பிடுங்கப்பட்டு தூக்கி வீசப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த காதலியும், அவரின் குடும்பத்தினரும், காதலன் குடும்பத்தினருக்கு சாபம் விடுகின்றனர். இரண்டு தரப்பினரையும் போலீஸார் சமரசப்படுத்தப்படுகின்றனர். இதையடுத்து காதலனைப் பார்த்து காதலி, `உன்னை எவ்வளவு தூரம் நம்பினேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாயே, என்னை திருமணம் செய்யாத நீ, சிறைக்குச் செல்' என்றுகூறியபடி காவல் நிலையத்துக்குச் செல்வதோடு வீடியோ முடிவடைகிறது.

காவல் நிலையத்தில் காதலி

இதையடுத்து, காதலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி காதலி கொடுத்த புகாரின்பேரில் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் காதல் ஜோடி பிரிந்ததற்கு பணம்தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மகனுக்கு வெளிநாட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என்பதால், அதற்கேற்ப பெண் பார்க்க மணமகன் வீட்டினர் கருதியுள்ளனர். அப்போதுதான் காதல் விவகாரம் மணமகனின் வீட்டினருக்குத் தெரியவந்தது. இதனால் காதலித்தப் பெண்ணை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துள்ளது. இதையறிந்த காதலி, காவல் நிலையம் வரை சென்று போராடினார். ஆரம்பத்தில் காதலனும் காதலியை கரம் பிடிக்க சம்மதித்தார். ஆனால், காதலன் குடும்பத்தினர், திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சிறைக்குச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். சிறைக்கு மகன் சென்றாலும் பரவாயில்லை, அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டோம் என்று காதலன் வீட்டினர் இறுதிவரை உறுதியாக இருந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காதலியின் பெயர் கனகா (மாற்றம்), காதலன் பெயர் குமார். இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு வழக்கம்போல எதிர்ப்புக் கிளம்பியது. காவல் நிலையத்திலேயே திருமணம் செய்துகொள்ள காதல் ஜோடி சம்மதம் தெரிவித்தநிலையில்தான் திடீரென பிரச்னை ஏற்பட்டது. கனகாவை திருமணம் செய்ய குமார் மறுத்துவிட்டார். இதனால் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்றனர். 

 திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த இந்தக் காதல் பஞ்சாயத்து இறுதியில் காதலனை சிறையில் தள்ளிவிட்டது.  வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்ட காதலன், சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.