`தற்கொலை மிரட்டல், உதவி இயக்குநர்!' - பியூட்டிஷியனால் பரபரப்பான நட்சத்திர ஹோட்டல்  | Woman sits dharna before chennai star hotel

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/05/2019)

கடைசி தொடர்பு:18:03 (20/05/2019)

`தற்கொலை மிரட்டல், உதவி இயக்குநர்!' - பியூட்டிஷியனால் பரபரப்பான நட்சத்திர ஹோட்டல் 

நட்சத்திர ஹோட்டல் கார் பார்க்கிங்கில் தர்ணாவில் ஈடுபடும் பியூட்டிசன்

சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த பியூட்டிஷியன் மற்றும் அவரின் நண்பர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்வேன் என பியூட்டிஷியன் மிரட்டியதால் பரபரப்பானது நட்சத்திர ஹோட்டல். 

சென்னை தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பருடன் தண்டையார்பேட்டையில் பியூட்டி பார்லர் நடத்திவரும் பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர்களை ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் 
பெண் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இந்தத் தகவல் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அந்தப் பெண், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தரையில் அமர்ந்திருந்தபடி, `என்னை உள்ளே அனுமதியுங்கள். இல்லையெனில் தற்கொலை செய்வேன்' என்று மிரட்டினார்.

அவரின் செயல்களை அதிர்ச்சியோடு ஹோட்டல் ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் `சார், என்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸார் சமரசப்படுத்தினர். ஆனால், போலீஸாரின் பேச்சை அவர் காதுகொடுத்துக் கேட்கும் மனநிலையில் இல்லை. பியூட்டிஷியனிடம் எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயன்றனர் போலீஸார். ஆனால், அவரோ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். இதனால் பெண் போலீஸார் மூலம் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பியூட்டி பார்லர் நடத்திவரும் அந்தப் பெண் அடிக்கடி, ஸ்டார் ஹோட்டலுக்கு வருவதுண்டு. அப்போது அங்கு நடக்கும் பார்ட்டியில் கலந்துகொள்வார். கடந்த 4-ம் தேதி, அந்தப்பெண் எங்களிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், `பார்ட்டியில் என் அருகில் ஒருவர் டான்ஸ் ஆடினார். அவர் என்னோடு டான்ஸ் ஆட வற்புறுத்தினார். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் என்னைத்தாக்கினார்' என்று கூறியிருந்தார். இதனால் பார்ட்டி நடந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது அந்தப் பெண்ணைத் தாக்கியது யாரென்று சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் வழக்கு பதிவு செய்து விசாரித்தோம். 

நட்சத்திர ஹோட்டல் கார்பார்க்கிங்கில் தர்ணாவில் ஈடுபட்ட பியூட்டிசன்

விசாரணையில் பியூட்டிஷியனைத் தாக்கியது சினிமா உதவி இயக்குநர் ஒருவர் என்று தெரியவந்தது. நாங்கள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குள் உதவி இயக்குநர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். பியூட்டிஷியனால் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அங்குள்ள ஊழியர்கள், நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனால், பியூட்டிஷியனை ஹோட்டலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று நிர்வாகம் முடிவு செய்தது. இதனால்தான் நேற்று பார்ட்டிக்கு வந்த பியூட்டிஷியன் பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால்தான் அவர், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட பியூட்டிஷியன் மீது ஹோட்டல் நிர்வாகம் புகார் கொடுக்கவில்லை. இதனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஸ்டார் ஹோட்டலில் பியூட்டிஷியன் செய்த ரகளையால் அங்கு வந்தவர்கள் தர்மசங்கடத்துக்குள்ளாகினர். கடந்த 4-ம் தேதி நடந்த பார்ட்டியில் பியூட்டிஷியன் பங்கேற்றபோது அவருடன் நடனமாட சினிமா பட உதவி இயக்குநர் முயற்சி செய்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த உதவி இயக்குநர், பியூட்டிஷியனின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். நைட் பார்ட்டி என்பதால் போதிய வெளிச்சம் அந்த அறையில் இல்லை. மேலும் பார்ட்டியில் பங்கேற்றவர்கள் போதையில் இருந்தனர். பியூட்டிஷியனின் நடவடிக்கையால் எங்களுக்கு பெரும் தலைவலி. இதேபோல் அவர் தொடர்ந்து செயல்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சம்பந்தப்பட்ட பியூட்டிஷியன், கடந்த 4-ம் தேதி முதல் இன்று வரை (20.5.2019) நட்சத்திர ஹோட்டலுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 4-ம் தேதி நடந்த சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல் நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இன்று அதிகாலை ஹோட்டலுக்கு வந்த பியூட்டிஷியனை உள்ளே அனுமதிக்கவில்லை என்றவுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அப்போது நான் குடிக்கணும் என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு போலீஸார், காலையிலேயே இப்படியொரு போன் அழைப்பா என்று நொந்தபடி தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீஸார், ஹோட்டலுக்குச் சென்று பியூட்டிஷியனை சமரசப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பியூட்டிஷியனின் கணவர், இறந்து சில மாதங்களாகின்றன. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.