`மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கக்கப்படும்!' - கர்நாடகப் பொதுப்பணித் துறை அமைச்சர் | Karnataka PWD minister on water releasing to TN

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (20/05/2019)

`மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கக்கப்படும்!' - கர்நாடகப் பொதுப்பணித் துறை அமைச்சர்

`கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை, மழையும் இல்லை. மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது' என கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கும்பகோணத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும், கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா இன்று கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். உடன் அவரின் மூத்த மகனும் கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணாவும் வந்தார். கர்நாடகாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர்கள், பின்னர் கார் மூலம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றனர். முன்னதாக தேவகவுடாவின் வருகையையொட்டி சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூரிலிருந்து சச்சின் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை செய்தனர். மேலும், சிறப்பு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் போலீஸாரும் தீவிரமாக சோதனை நடத்தினர்.

பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் தேவகவுடா மற்றும் ரேவண்ணாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சாரங்கபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு வெளியே வந்த தேவகவுடாவிடம், கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக வெளிவந்திருப்பது குறித்து கேட்டு செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் ``நான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக வந்துள்ளேன்'' என்று கூறிவிட்டு உடனே காரில் ஏறி புறப்பட்டு மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் சென்றார்.

பின்னர் கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான ரேவண்ணாவிடம் தமிழகத்துக்கு ஜூன் 12-ம் தேதி சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா எனச் செய்தியாளர்கள் கேட்டனர். ``கர்நாடகாவில் அணைகளில் தண்ணீர் இல்லை, மழையும் இல்லை. மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது'' என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். தேர்தல் முடிவுகள் வர இருக்கும் சூழ்நிலையில் தேவகவுடாவும், அவரின் மகனும் சுவாமி தரிசனம் செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க