தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்! | Thoothukudi sub registrar office issues marriage certificate Transgender marriage

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:42 (20/05/2019)

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கை திருமணத்துக்குப் பதிவுச் சான்றிதழ்!

தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப்பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அருண்குமார் - ஸ்ரீஜா

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளோமா இன்ஜினீயரான இவர் ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் ஆங்கில பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அருண்குமாரும், ஸ்ரீஜாவும் கடந்த ஆறு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு விநியோகிக்கப்பட்டு கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.  ஆனால், திருமணப் பதிவிற்காக திருக்கோயில் அலுவலகத்தில் முன்பணம் செலுத்தியும் திருக்கோயில் தரப்பில் திருமணப்பதிவுச் சான்றிதழ் தரப்படவில்லை.

அருண்குமார் - ஸ்ரீஜா

இதையடுத்து இவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர். சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தைப் பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு வழிவகை இல்லாததால் உங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை என சார்பதிவாளர் அலுவலகத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதி தங்களின் திருமணத்தைப் பதிவு செய்து திருமணப்பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அருண்குமார் - ஸ்ரீஜா

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியின் திருமணத்தைப் பதிவு செய்து அவர்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்துக்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெற தகுதியானவர்கள் என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதி தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமணப் பதிவுச்  சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றிக்கொண்டனர்.

இதுகுறித்து அருண்குமார் ஸ்ரீஜா தம்பதி பேசுகையில், ``போன வருஷம் எங்களோட கல்யாணம் தூத்துக்குடி சிவன் கோயில்ல நடந்துச்சு. சட்ட விதிமுறைகளின்படி எங்களின் திருமணத்தைப் பதிவு செய்ய வழி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதற்குப் பிறகு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். 

அருண்குமார் - ஸ்ரீஜா

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று எங்களது திருமணத்தைப் பதிவு செய்துள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவுச் சான்றிதழ் வழங்குவது இதுதான் முதல் முறை" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க