`மத்தியில் மோடிதான்; தமிழகத்தில் முடிவுகள் மாறுபட்டு வர வாய்ப்பிருக்கிறது!' - இல.கணேசன் | BJP will come to power says Ila Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (20/05/2019)

கடைசி தொடர்பு:21:05 (20/05/2019)

`மத்தியில் மோடிதான்; தமிழகத்தில் முடிவுகள் மாறுபட்டு வர வாய்ப்பிருக்கிறது!' - இல.கணேசன்

`மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைவது உறுதி. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முடிவுகள் மாறுபட்டு வர வாய்ப்பிருக்கிறது’ என பா.ஜ.க-வின் மூத்த தலைவர் இல.கணேசன் ஈரோட்டில் பேசினார்.

அ.தி.மு.க

தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் பா.ஜ.க-வின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எம்.பியும் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கலந்துகொண்டார்.

நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய இல.கணேசன், ``தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான் வெளிவந்திருக்கிறது. இருப்பினும், மக்கள் மத்தியில் உண்மையான தேர்தல் முடிவுகள் வந்ததைப் போன்ற ஒரு பரபரப்பு நிலவுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. எல்லா கருத்துக் கணிப்புகளிலும், பா.ஜ.கவே அதிக இடத்தில் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முடிவுகள் மாறுபட்டு வர வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை தி.மு.க - அ.தி.மு.க ஆகியவை 50 : 50 என்ற அளவில் வெற்றி கிடைக்கும் எனத் தோன்றுகிறது. 

அ.தி.மு.க

தான் தோற்றாலும் பரவாயில்லை எப்படியாவது அ.தி.மு.கவை தோற்கடித்தே தீருவேன் என்று அனைத்துத் தொகுதிகளிலும் டி.டி.வி. தினகரன் வேட்பாளர்களை நிறுத்தியதில், அ.தி.மு.க-வினுடைய வாக்குகள் கொஞ்சம் சரிய வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையே வேண்டுமானால் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, இதில் தி.மு.க பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமில்லை. 23-ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட இருக்கிறார்கள். அந்தச் சந்திப்பு இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடக்கத் தான் வாய்ப்பிருக்கிறது. 

காங்கிரஸ் வீழ்ச்சியடையும் என நான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறேன். இந்தியா முழுக்க காங்கிரஸுக்கு 30 - 40 வரையிலான இடங்கள்தான் கிடைக்கும். இது காங்கிரஸின் கடைசிக் காலம். பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்றார்.

அ.தி.மு.க-வினரும் தமிழக பா.ஜ.க-வினரும் ‘அ.தி.மு.க அமோகமான வெற்றி பெறும்’ எனச் சொல்லி வருகையில், ‘அ.தி.மு.க-வுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்’ எனப் பா.ஜ.க-வின் மூத்த தலைவரான இல.கணேசன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.