`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது!' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு | couples given petition to the superintendent of police

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/05/2019)

கடைசி தொடர்பு:22:30 (20/05/2019)

`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது!' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு

தஞ்சாவூரில் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி,  ``தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எங்களை ஆணவப் படுகொலை செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க வேண்டும்” என  எஸ்.பி-யிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரவீன்குமார் - சரண்யா

கும்பகோணம் நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சரண்யா இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் சரண்யாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இருவரையும் பல முறை ஆணவக் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட முறை போலீஸில் புகார் செய்ததாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அந்த தம்பதி தனித் தனியாக தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்.பி.மகேஸ்வரனிடம், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி வேண்டும் என மனு அளித்தனர். பின்னர் பிரவின் கூறியதாவது, ``நாங்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோம். இது பலருக்குப் பிடிக்கவில்லை. இதனால் நாச்சியார் கோயில் முன்னாள் ஆய்வாளர் ஜெயகெளரி என்னை ரவுடிகள் லிஸ்டில் சேர்த்துவிட்டார். இதைத்தொடர்ந்து என் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டனர். இதனால் நானும் என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எனவே, என் பெயரை ரவுடி லிஸ்டில் இருந்தும் நீக்கவும், என் மீது பொய் வழக்கு போடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்'' என்றார்.

பிரவீன்குமார் - சரண்யா

சரண்யா கூறுகையில், ``நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் சாதி அரசியல் செய்யும் நபர்கள் மற்றும் சாதி வெறி பிடித்த சிலர் கூலிப்படைகளை வைத்து எங்கள் மீது பலமுறை கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். என்னையும் பலமுறை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அத்துடன் என் கணவர் மீது நாச்சியார்கோவில் போலீஸார் பொய் வழக்கு போட்டு ரவுடிப் பட்டியலில் வைத்துள்ளனர். ஆனால், என் கணவர் எந்தத் தப்பும் செய்ததில்லை. எனவே, போலீஸார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருபுறம்  எங்களை ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ள நபர்கள், மற்றொரு புறம் போலீஸாரின் தொல்லை என எங்களின் உயிருக்குக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து உள்ளது. கோகுல் ராஜ், தர்மபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் போன்று எங்களை ஆணவப் படுகொலை செய்ய முயற்சி  நடக்கிறது. எனவே, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் எங்களை காத்துக்கொள்ள துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு உரிமம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க