ஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ! -குடும்பத்துடன் கண்டுகளித்த ஆளுநர் | TN Governor watched bollywood movie in Ooty theatre

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (20/05/2019)

கடைசி தொடர்பு:07:02 (21/05/2019)

ஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ! -குடும்பத்துடன் கண்டுகளித்த ஆளுநர்

ஊட்டி அசெம்பிளி ரூம் திரையரங்கில், ஆளுநரின் விருப்பத்தின் பேரில், 1960-ம் ஆண்டு வெளியான 'முகல்-இ-அசாம்' திரைப்படத்தை நள்ளிரவு வரை சிறப்புக் காட்சியில் குடும்பத்துடன் கண்டு ரசித்தார்.

திரையரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காகக் கடந்த 16-ம் தேதி ஊட்டிக்கு வந்தார். மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்த அவர், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ளார். நாளை நடைபெறும் மலர்க் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். கடந்த 5 நாள்களாகத் தங்கியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று பொழுதுபோக்கிவருகிறார். முதுமலை, பைக்காரா, அவலாஞ்சி என ஒவ்வொரு நாளும் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடச் செல்லும்போது, ஊட்டி நகரில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், நீண்ட நேரம் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துவருகின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இந்த நிலையில், ஊட்டியில் உள்ள அசெம்ப்ளி அரங்கில் திரைப்படம் பார்க்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கு, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாள்களுக்கு முன்னதாகவே, ஊட்டியில் ஆளுநர் படம் பார்க்க உள்ளார் என்ற உத்தரவு ராஜ்பவன் மாளிகையிலிருந்து வந்துள்ளது. தற்போது அசெம்ப்ளி தியேட்டர் நவீனப்படுத்தப்பட்டுள்ளதால், 1960-களில் வெளியான ஃபிலிம்ரோல் கொண்ட திரைப்படங்களைத் திரையிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பின், இதற்காகவே மும்பையிலிருந்து சில டெக்னீஷியன்கள் வரவழைக்கப்பட்டு, ஊட்டி அசெம்ப்ளி தியேட்டர் புரொஜெக்டர் அறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பின்னர், ஆளுநர் விருப்பம் தெரிவித்த `முகல் இ அசாம்' படம் நேற்று இரவு 8.45 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக, மாலை நேர ஷோ ரத்துசெய்யப்பட்டு, ஆளுநருக்காக இந்தப் பிரத்யேக ஷோ போடப்பட்டுள்ளது. மூன்றரை மணி நேரம் ஓடிய திரைப்படத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். திரைப்படம் இரவு 12.30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின்னர், அவர் ஊட்டி ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார். இவருடன் கூடுதல் முதன்மைச் செயலாளர் ராஜகோபால், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி சண்முகப்பிரியா உட்பட உயர் அதிகாரிகள், ராஜ்பவன் அதிகாரிகள் படம் பார்த்தனர்.